
ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுகவின் 3 அணிகள், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்பட பல காட்சிகள் போட்டியிடுகின்றன.
அதிமுகவின் சசிகலா அணியில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆனால், இருவருமே இரட்டை இலை சின்னத்தை வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
இதனால், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என கோரி, தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளனர். இதுதொடர்பான இறுதி விசாரணை இன்று நடைபெற உள்ளது.
இதைதொடர்ந்து இரு அணியை சேர்ந்த வழக்கறிஞர்கள் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அலுலகத்தில் தற்போது, வாதத்தில் கலந்து கொள்வதற்காக தயாராக உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் தங்களது வாதத்தை முன் வைக்க உள்ளனர்.
அதேபோல், சசிகலா தரப்பில் சல்மான் குர்ஷித், மோகன் பராசன் உள்ளிட்டோர் தங்களது வாதத்தை தொடரவும் உள்ளனர். இந்த விசாரணை சுமார் 3 மணிநேரம் வரை நடக்கும் என தெரிகிறது.
இதையடுத்து, இரு தரப்பு வாதங்களை கேட்டு விசாரணை நடத்தும் தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்குவது என முடிவு எடுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.