
இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எங்கள் லட்சியம் என மாபா பாண்டியராஜன், தடாலடியாக கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் அவை தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவரை வெல்வதற்கு, இந்த தொகுதியில் யாரும் இல்லை.
ஏற்கனவே இந்த தொகுதியில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அதனுடன், புதிய திட்டங்களை நாங்கள் கொண்டு வருகிறோம். இதற்கான அறிக்கை தயாராகி கொண்டு இருக்கிறது.
இரட்டை இலை சின்னத்தை, சசிகலா அணியினர் வைத்து கொண்டு இருக்கின்றனர். உண்மையில் அந்த சின்னம் எங்களுக்கு சொந்தமானது. உண்மையான அதிமுகவினருக்கு சொந்தமானது.
அந்த சின்னத்தை மீட்பதற்காக, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். விரைவில், இரட்டை இலை சின்னத்தை மீட்போம். அதுவே எங்கள் லட்சியம்.
சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.