திமுக ஆட்சி விவசாய விரோத ஆட்சி… ஒபிஎஸ் – இபிஎஸ் தாக்கு!!

By Narendran SFirst Published Nov 10, 2021, 1:20 PM IST
Highlights

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தியுள்ளனர். 


நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில் 2021- 22 ஆம் ஆண்டுக்கான நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு 2,015 ரூபாய் என்றும் 10 விழுக்காடு பிழிதிறன் கொண்ட கரும்புக்கான ஆதார விலை டன்னுக்கு 2 ஆயிரத்து 900 ரூபாய் என்றும் அதற்கு குறைவான பிழிதிறன் கொண்ட கரும்பு டன்னுக்கு 2755 ரூபாய் என்றும் தான் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று திறந்தவெளியில்,  வைக்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துவிட்டன என்றும் அதேபோல் அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டன என்றும் தெரிவித்துள்ளனர்.

இவற்றை தவிர்க்கும் பொருட்டு, தேவைப்படும் இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றும் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர்கள், மேலும் பெரு மழையின் காரணமாக டெல்டாப் பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகி உள்ளனர் என்றும் ஆகவே சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி உரிய ஆய்வு செய்து பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். விடியலை நோக்கி என்று தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிய தி.மு.க , ஆட்சிக்கு வந்தால் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்; கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அதுகுறித்து வாய்மூடி மவுனம் காக்கும் அரசாக, விவசாயிகளை விரக்தியை நோக்கி அழைத்துச் செல்கின்ற விடியா அரசாக தி.மு.க. அரசு விளங்குகிறது என்று விவசாயிகள் சொல்லும் அளவுக்கு தமிழ் நாட்டில் விவசாய விரோத தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும்  அவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா? என்ற பழமொழியை மனதில் நிலை நிறுத்தி வாக்களித்த விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாகவும், கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் ஆகும் உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல் நேரடிக் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனுக்குடன் கொள்முதல்  செய்து அதற்குரிய பணத்தை உடனடியாக வழங்கி, விவசாயிகளை விரக்தியில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக விவசாயிகள் சார்பிலும், அதிமுக கழகத்தின் சார்பிலும் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

click me!