நீர் நிலைகளையும், நிலங்களையும் காக்க மீண்டும் இதை கொண்டு வாருங்கள்.. இளைஞர்களை அழைக்கும் ராமதாஸ்.!

By vinoth kumarFirst Published Nov 10, 2021, 12:56 PM IST
Highlights

தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள்  உள்ளிட்ட நீர்நிலைகள் இருக்கும். அவை தான் அந்த ஊரின் பாசன ஆதாரங்கள் ஆகும்.  ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு கைகொடுக்கும் இந்த நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கோடைக்காலத்தில் அந்த நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், தூர் வாருதல் உள்ளிட்ட  பணிகளை வேளாண் குடிமக்கள் வீட்டுக்கு ஒருவர் வீதம் தாமாக முன் வந்து மேற்கொள்வார்கள்.

நீர்நிலைகளை பராமரிக்கும் பணிகள் அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்ற பிறகு அவற்றின் மீதான மக்களின் அக்கறை குறைந்து விட்டது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- குடிமராமத்து  என்பதன் பொருள் இன்றைய தலைமுறையின் பெரும்பான்மையான கிராமப்புற  இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  நகர்ப்புற இளைஞர்களோ குடிமராமத்து என்ற வார்த்தையையே கேட்டிருக்க மாட்டார்கள். வேளாண் குடிகளைக் காக்க வேளாண் குடிகளால் உருவாக்கப்பட்ட அற்புதத்திட்டம் தான் குடிமராமத்து ஆகும். குடிமராமத்து  என்பது மன்னர்கள் காலத்தில் தோன்றி ஆங்கிலேயர் காலத்திலும், அதற்குப் பிறகும் கூட நடைமுறையில் இருந்த நீர்நிலை பராமரிப்பு முறையாகும்.  

தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள்  உள்ளிட்ட நீர்நிலைகள் இருக்கும். அவை தான் அந்த ஊரின் பாசன ஆதாரங்கள் ஆகும்.  ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு கைகொடுக்கும் இந்த நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கோடைக்காலத்தில் அந்த நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், தூர் வாருதல் உள்ளிட்ட  பணிகளை வேளாண் குடிமக்கள் வீட்டுக்கு ஒருவர் வீதம் தாமாக முன் வந்து மேற்கொள்வார்கள்.  இவ்வாறு குடிமக்களால் மராமத்து செய்யப்படுவதைத் தான் குடிமராமத்து என்று அழைத்தனர்.

குடிமராமத்தின்போது ஏரியின் உட்பரப்பில் கரையின் உயரத்தைப் போல இரு மடங்கு தூரம் தள்ளி தூர் வாரத் தொடங்குவார்கள். அதாவது கரையின் உயரம் 10 மீட்டர் எனில் ஏரியின் உள்பகுதியில் 20 மீட்டர் தள்ளி தூர் வாருவார்கள். கரையின் அடிப்பகுதி பலவீனம் ஆகி அதனால் ஏரிக்கரை உடைந்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்வார்கள். இதற்கு தாக்கு எடுப்பது என்று பெயர். இப்படி எடுக்கப்படும் ஏரியின் மண், மழைக் காலத்தில் ஏரி அறுந்து ஓடியிருக்கும் பள்ளங்களில் முதலில் கொட்டி சமப்படுத்துவார்கள்.  மீதமுள்ள மண்ணைக் கொண்டு கரைகளை பலப்படுத்துவர். இந்தப் பணிகளுக்கு போக மீதம் இருக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். மண்பாண்டங்கள் செய்வோர், வீடு கட்டுவோர் மற்றும் ஊரின் இதர தேவைகளுக்கும் மண் பயன்படுத்தப்படும்.

 அடுத்ததாக, ஏரியில் வளர்ந்திருக்கும் புதர்கள், முள் செடிகள், மழைக் காலத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகள் போன்றவற்றை அப்புறப்படுத்துவார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மதகுகள், கலுங்குகளில் இருக்கும் அடைப்புகள் நீக்கப்படும். இவைதான் குடி மராமத்தின் அடிப்படைப் பணிகள். இந்தப் பணிகள் முறையாக செய்யப்பட்டதால் தான் கடந்த காலங்களில் நீர்நிலைகள் மிகவும் பாதுகாப்பாக  இருந்தன. குடிமராமத்து செய்யப்பட்ட நீர்நிலைகளில் அதன் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால் அது அந்த ஆண்டு முழுமைக்கும் போதுமானதாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இருபோகம் விளைந்தது. அதனால் தான் அந்தக் காலத்தில் உழவு  செழித்தது. பாசத்திற்கான  தேவை போக மீதமுள்ள தண்ணீர் கோடைக்காலத்தில் கால்நடைகளின் தாகம் தீர்க்க பயன்படும். ஆனால், மக்களாட்சியில் நீர்நிலைகளின் பராமரிப்புப் பணிகள் பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்ட பிறகு  அது அவ்வளவு சிறப்பானதாக இல்லை. 

நீர்நிலைகளை பராமரிக்கும் பணிகள் அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்ற பிறகு அவற்றின் மீதான மக்களின் அக்கறை குறைந்து விட்டது. பொதுப்பணித்துறையோ நீர்நிலைகளின் பராமரிப்புப் பணியை காண்டாக்ட் விடுவதுடன் தனது கடமையை முடித்துக் கொண்டது. காண்ட்ராக்டர்கள்  நீர்நிலைகளின் கரைகள் மீது நான்கு சட்டி மண்ணை தூவி கரைகளை வலுப்படுத்தியதாகக் கூறி அதற்காக ஒப்பந்தத் தொகையை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகும் கூட நீர்நிலைகள் வலிமை பெற்று இருக்காது. நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்பட்டு இருக்காது என்பதால் சிறு மழைக்கு அவை நிரம்பி விடும். பெருமழை பெய்தால் கரை உடைந்து விடும். வள்ளுவர் புகழ்ந்த வான்மழையால் கிடைத்த தண்ணீர், அது எடுக்கப்பட்ட கடலுக்கே மீண்டும் சென்று விடும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு நிதியுதவியுடன் குடிமராமத்து  திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட அது இப்போது கைவிடப்பட்டு விட்டது.

மன்னராட்சியிலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும் இருந்தது போன்ற குடிமராமத்து பணிகள் முழுக்க முழுக்க வேளாண் குடிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும்.  ஒவ்வொரு நீர்நிலையையும் அதைக் கொண்டு பாசனம் செய்யும் வேளாண் குடிகள்  வீட்டுக்கு ஒருவர் வீதம் இணைந்து குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிமராமத்துப் பணிகளில் பங்கேற்க மறுக்கும் வேளாண் குடிகளுக்கு பாசன உரிமை மறுக்கப்பட வேண்டும். குடிமராமத்துப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஊர் இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி சேர்த்து இருவேளை சத்தான உணவும், காலை மற்றும் மாலை வேளைகளில் சுவையான தேநீரும் வழங்க வேண்டும்.

நாம் எப்போதும் முன்னேறிக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்பார்கள். சில நேரங்களில் பின்னோக்கிச் செல்வது கூடுதல் பயனை அளிக்கும். குடிமராமத்து திட்டமும் அத்தகையது தான். பழங்கால முறைப்படி குடிமராமத்துப் பணிகளை வேளாண் குடிகளாகிய நாம் இணைந்து மேற்கொண்டால்  ஏரியின் கரை உடைப்பு, குளம் வறண்டது, வாய்க்கால் காணாமல் போனது, நீர் வரத்து வாய்க்கால்கள் அபகரிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டது போன்ற செய்திகள் இனி வராது.  ஆகவே, ஊர் கூடி குடிமராமத்து செய்வோம்.... வான்மழையை சேமிப்போம்.... உலகுக்கே உணவளிப்போம்! என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!