டெல்டா மாவட்டங்களில் கனமழை பாதிப்பு… ஓபிஎஸ்- ஈபிஎஸ் இன்று ஆய்வு!! | Tamilnadu Rain

By Narendran SFirst Published Nov 16, 2021, 11:06 AM IST
Highlights

#TamilnaduRain | டெல்டா மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிடுகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிடுகின்றனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்களை வாங்குகின்றனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது. அதுமட்டுமின்றி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கட்டுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் வெள்ள நீர் வடியாமல் குளம் போல் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் வெள்ள நீரை ராட்சத மோட்டர்கள் மூலம் விரைந்து  வெளியேற்றவும் உத்தரவிடார். அவரை தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்‌, சென்னை மாநகர்‌ மற்றும்‌ புறநகர்‌ பகுதியில்‌ மழைநீர்‌ தேங்கிய இடங்களை நேரில்‌ பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ நிவாரணப்‌ பொருட்களை வழங்கினர்‌.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல வீடுகள் மீது இடிந்து விழுந்ததுடன் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதை அடுத்து மழையால் ஏற்பட்ட பயிர்சேதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.  கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் அப்போது 18 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 5 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கு தலா ரூ.2,10,000க்கான ஆணை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளாக கனமழையால் பசுமாடு இழந்தவர்களுக்கு தலா ரூ.30,000, கன்றுக்குட்டி இழந்தவர்களுக்கு தலா ரூ.16,000, பகுதியளவு கூரைவீடு சேதமடைந்தவர்களுக்கு தலா ரூ.4,100 என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணத் தொகைகளை வழங்கினார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புத்தூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களையும், வெள்ளப் பாதிப்புகளை விளக்கும் புகைப்படங்களையும் பார்வையிட்டார். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று டெல்டா மாவட்டங்களில் அந்தந்த மாவட்டக்‌ கழகப்‌ பொறுப்பாளர்களுடன்‌ நேரில் சென்று பார்வையிட உள்ளனர். அதை தொடர்ந்து கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருவரும் ஆய்வு  செய்வதுடன்,  மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளனர்.

click me!