நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஒன்றினைந்து பெங்களூரில் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், இன்று அடுத்த கட்டமாக பெங்களூருவில் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
பாஜகவை வீழ்த்த திட்டம் போடும் எதிர்கட்சிகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலமே உள்ள நிலையில், பாஜகவை மீண்டும் வெற்றி பெற விடாமல் தடுக்கும் வகையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 17 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், மு.க.ஸ்டாலின்,
பாட்னாவில் கூடிய 17 கட்சிகள்
ஒமர் அப்துல்லா, ஹேமந்த் சோரன், மெகபூபா முஃப்தி, உத்தவ் தாக்கரே, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஓரணியில் சந்திப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த கூட்டத்தை சிம்லாவில் நடத்த திட்டமிட்ட நிலையில், ஒரு சில காரணங்களுக்காக பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. அதன் படி எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும்(ஜூலை 17 மற்றும் 18 , நாளையும்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பெங்களூரு தனியார் நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
பெங்களூரில் இரண்டு நாள் கூட்டம்
இன்று மாலை 6 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள். அப்போது தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கூட்டத்தில் முக்கிய கட்சியான ஆம் ஆத்மி பங்கேற்குமா.? என்ற கேள்வி எழுந்தது. டெல்லி அரசின் நிர்வாக பணிகள் தொடர்பான மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளதன் காரணமாகவும் நாடாளுமன்ற கூட்டத்தில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்வதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளதையடுத்து இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள் யார்.?
இதே போல பெங்களூர் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மமதா பானர்ஜிக்கு சோனியா காந்தி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்திருந்தார். எனவே அவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து திமுக ஏற்கனவே கலந்து கொண்ட நிலையில், இன்றைய கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே எதிர்கட்சிகளின் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பலம் பொருந்திய பாஜகவை எப்படி வீழ்த்துவது, பிரதமர் வேட்பாளரை அறிவிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
கண்டிக்காமல் திரும்பி வந்தால் கருப்புச் சட்டை போராட்டம்! மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை