எதிர்கட்சிகள் ஆலோசனை..! மம்தா பானர்ஜி சந்திப்பு! டெல்லியில் திமுக முகமாகும் கனிமொழி!

By Selva KathirFirst Published Jul 30, 2021, 10:19 AM IST
Highlights

 கடந்த ஒரு வாரமாக டெல்லியில் சுற்றிச் சுழலும் கனிமொழி, டி.ஆர்.பாலுவை ஓரம்கட்டி திமுகவின் முகமாக மாறி வருகிறார்.

கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த கனிமொழி தற்போது டெல்லியில் இருந்து தேசிய அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டு எதிர்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அண்மையில் ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக இது போன்ற கூட்டங்களில் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவராக இருக்கும் டி.ஆர்.பாலு கலந்து கொள்வது தான் வழக்கம். ஆனால் இந்த கூட்டத்தில் டி.ஆர்.பாலு மட்டும் அல்லாமல் கனிமொழியும் கலந்து கொண்டார். கூட்டத்திலும் கூட இருவரும் அருகருகே அமரவில்லை.

ஆலோசனையின் போது கனிமொழி தனியாகவே அமர்ந்திருந்தார். தொடர்ந்து ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அருக்கு அருகே கனிமொழி நின்று கொண்டிருந்தார். டி.ஆர்.பாலு சற்று தள்ளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் டெல்லி வந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று சந்தித்தார். மம்தா பானர்ஜி டெல்லி வந்திருப்பதே எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் வகுக்கவே ஆகும்.

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற மாநில கட்சிகளின் பிரதிநிதிகளை மம்தா சந்தித்து பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே திமுக சார்பில் கனிமொழி, மம்தாவை சந்தித்ததாக கூறுகிறார்கள். அப்போது வழக்கமான பெகாசஸ் விவகாரம் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் 2024 தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேசியதாக கூறுகிறார்கள். மத்திய பாஜக அரசை தனக்கு பிறகு நேரடியாக எதிர்ப்பது திமுக அரசு மட்டுமே என்று மம்தா அப்போது கனிமொழியிடம் கூறியதாக சொல்கிறார்கள்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அமையும் அணியில திமுக முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் மம்தா, கனிமொழியிடம் கூறியதாக கூறுகிறார்கள். கலைஞர் மறைந்த பிறகு இப்படி மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தொடர்பான ஆலோசனையில் கனிமொழி பங்கேற்று இருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள். ஏனென்றால் கடந்த 2019ம் ஆண்டு வரை திமுக நாடளுமன்ற குழு தலைவராக கனிமொழி இருந்தார். ஆனால் அதன் பிறகு டி.ஆர்.பாலு அந் பொறுப்பிற்கு வந்துவிட்டார்.

அப்போது முதல் கட்சியின் டெல்லி முகமாக டி.ஆர்.பாலு தான் இருந்து வருகிறார். ஆனால் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் சுற்றிச் சுழலும் கனிமொழி, டி.ஆர்.பாலுவை ஓரம்கட்டி திமுகவின் முகமாக மாறி வருகிறார்.

click me!