
ஜன் கீ பாத் (மக்களின் குரல்) மற்றும் இந்தியா நியூஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து பஞ்சாம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் யாருக்கு வெற்றி என்கிற பிரம்மாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளன. இதில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் காங்கிரஸையும் பாஜக கூட்டணியையும் வீழ்த்தி வாகை சூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் சம பலத்தோடு இருந்தாலும் பாஜகவுக்கு கருத்துக்கணிப்பில் 2% முன்னிலை உள்ளதாகவும், இது எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை பொறுத்த வரையில் மொத்தம் உள்ள 117 இடங்களில், ஆளும் காங்கிரஸ் கட்சி கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் 77ல் வென்று அசுர பலத்துடன் ஆட்சியமைத்தது. விவசாயிகள் பிரச்சனை அம்மாநில தேர்தல் களத்தின் முக்கிய பேசுபொருள். விவசாய சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றலும், பஞ்சாப் மக்களுக்கு பாஜக மீதான அதிருப்தி நீடிப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதனால் பாஜக, சிரோமணி அகாலிதளம் கூட்டணி பஞ்சாபில் கடுமையான தோல்வியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாப்பில் உட்கட்சி பூசல்கள் அதிகம் உள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியுள்ளனர். போதாக்குறைக்கு சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை எல்லாம் காங்கிரஸ் பற்றிய தவறான பிம்பதை உருவாக்கியுள்ளன. மேலும் விலைவாசி உயர்வு, போதை பழக்கத்திற்கு அதிகமானோர் உயிரிழக்கும் விவகாரம் என்று பல பிரச்சனைகள் உள்ளன. இதனால், கடந்த முறை 77 இடங்களோடு ஆட்சியமைத்த காங்கிரஸ், இந்தமுறை 33 முதல் 39 இடங்கள் மட்டுமே பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.
கடந்த முறை 20 இடங்களில் வென்று எதிர்கட்சியாக அமைர்ந்தது அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது. மேலும் வெற்றி வாய்ப்புள்ள மாநிலம் என்பதால் அரவிந்த் கேஜ்ரிவாலும் அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பஞ்சாப் மக்கள் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், மத்தியில் ஆளும் பாஜக இருவர் மீதும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் ஆம் ஆத்மிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. கருத்துக் கணிப்பின் படி ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 117 இடங்களில் 60 முதல் 66 இடங்களில் வென்று பஞ்சாபில் புதிதாக ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது. அக்கட்சிக்கு 41% முதல் 42% வாக்கு வங்கி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.