
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ்-மஜத கூட்டணி சார்பிலும், பாஜ சார்பிலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிக்கு மே 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் ஜெயநகர், ராஜராஜேஸ்வரி தொகுதியில் தேர்தல் ரத்தானது. இதை தொடர்ந்து 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ், பாஜ கட்சி மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.
இறுதியில் பாஜ 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 38 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கர்நாடகாவில் தேர்தல் நடந்த 222 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை. ஆனால் எந்த கட்சியாலும் மெஜாரிட்டி இடங்களை பெற முடியவில்லை.
எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மஜத ஆட்சி அமைக்க நிபந்தனையின்றி ஆதரவு அளித்ததால் இதை கொஞ்சமும் எதிர் பார்க்காத பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்க பாஜ மேலிடம் சார்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திரபிரதான், நட்டா ஆகியோர் பெங்களூருவிற்கு அனுப்பி வைத்தார்.
மோடியிடம் அமித்ஷாவும் ஆலோசித்து வருகிறார். கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தடுத்த அரசியல் நகர்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூவத்தூரில் எம்எல்ஏக்களை தங்கவைத்து அதிமுக அரசு பாதுகாத்தது போன்று தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாக்க ஆந்திரா அல்லது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு அனுப்பிவைக்க காங்கிரஸ், மஜதவினர் முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 2008ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் கமல்’ என்னும் நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டது. அதாவது, எம்.எல்.ஏ.க்களை பாஜக பக்கம் (கமல் - தாமரை) இழுக்கும் திட்டம். இப்போதும் ஆபரேஷன் கமலைப் பயன்படுத்தி காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுக்கும் பணிகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, முதல்வர் சித்தராமையா “மீண்டும் ஆபரேஷன் கமலைக் கொண்டுவர பாஜக முயற்சிகளை மேற்கொள்கிறது. ஆனால், பாஜகவின் முயற்சிகள் ஒருபோதும் எடுபடாது” என கூட்ட தெரிவித்தனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 65 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 58 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் காங்கிரஸும் மஜதவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்தன. இது தரம் சிங் பார்முலா என்று அழைக்கப்பட்டது. ஆனால், 2006ஆம் ஆண்டு தரம் சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு பாஜக - மஜத கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்தன. இதற்காக இரு கட்சிகளும் 20 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் முதல்வர் பதவியை வகிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் 2006ஆம் ஆண்டு பிப்ரவரியில் குமாரசாமி முதல்வராகப் பதவி ஏற்றார். 20 மாதங்கள் கழித்து 2007ஆம் ஆண்டு அக்டோபரில் பாஜகவுக்கு முதல்வர் பதவியை விட்டுத்தரக் கோரியபோது பதவி விலக மறுத்துவிட்டார் குமாரசாமி. இதனால் குமாரசாமிக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டது.
பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு 2007 நவம்பர் 12ஆம் தேதி எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றார். ஏழு நாள்களே முதல்வராக இருந்த நிலையில், எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்த்தார் குமாரசாமி. இதனால் கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
2008ஆம் ஆண்டு மீண்டும் கர்நாடகாவுக்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 112 இடங்களுக்கு மேலும் மூன்று எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பாஜகவுக்குத் தேவைப்பட்டது. இதனால் மஜத எம்.எல்.ஏக்கள் நால்வர், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மூவரைத் தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியமைத்தது பாஜக. இவர்கள் அனைவரும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதுதான் ‘ஆபரேஷன் கமல்’!