
கர்நாடகத்தைப் போலவே ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் நடக்கும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஜ்பாய் பிரமதராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்கா. இவர் மத்தியில் ஆளும் மோடி அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில் பீகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது தான் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் பாஜகவின் நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அண்மையில் நடிகரும் பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவுடன் சென்னை வந்த அவர், திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் போக்கு குறித்து யஷ்வந்த் சின்கா தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஜனநாயகத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் பாஜகவில் இருந்து விலகியதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அடுத்தாண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெறமுடியவில்லை என்றாலும்கூட பாஜக ஆப்ரேஷன் கமல் திட்டத்தை செய்யத் தயங்காது என எச்சரித்துள்ளார்.