ஓ.பி.எஸ்சை சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுத்தது ஏன்? 3 மாதங்களுக்கு பின் அம்பலமான ரூ.14 லட்சம் மேட்டர்!

By vinoth kumarFirst Published Oct 21, 2018, 10:21 AM IST
Highlights

டெல்லியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்காமல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பி அனுப்பியதற்கான காரணம் மூன்று மாதங்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது.

டெல்லியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்காமல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பி அனுப்பியதற்கான காரணம் மூன்று மாதங்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது. மதுரையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகனை அவசரமாக சென்னைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இதற்காக விமானப்படையின் விமானம் மூலம் கடந்த ஜுலை 1ந் தேதி ஓ.பி.எஸ் சகோதரர் பாலமுருகன் மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இதற்காக பெங்களூர் அருகே உள்ள யெலஹன்கா விமானப்படை தளத்தில் இருந்து ஏஎன் 32 ரக விமானம் மதுரை வந்து பாலமுருகனை சென்னையில் இறக்கிவிட்டு விட்டு பின்னர் மீண்டும் யெலஹன்கா சென்றது. ஜூலை 1ந் தேதி விமானப்படையின் விமானம் ஓ.பி.எஸ் சகோதரருக்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் ஜுலை 15ந் தேதிக்கு பிறகே தகவல் வெளியானது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் விமானத்தை எப்படி ஓ.பி.எஸ்சின் சகோதரருக்கு பயன்படுத்தலாம் என்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். 

இதனால் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தர்மசங்கடமான சூழல் உருவானது. இந்த நிலையில் தான் அதே ஜுலை 24ந் தேதி தன்னை சந்திக்க வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நேரம் கொடுக்காமல் நிர்மலா சீதாராமன் திருப்பி அனுப்பினார். இதற்கான காரணம் பலவாறு சொல்லப்பட்டாலும் கூட விமானப்படை விமானத்தை பயன்படுத்தியதற்கான கட்டணத்தை ஓ.பி.எஸ் தரப்பு சரியான நேரத்தில் செலுத்தாதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. விமானப்படை விமானத்தை மருத்துவ உதவிக்கு பயன்படுத்திவிட்டு அதற்கான கட்டணத்தை பிறகு செலுத்த வேண்டும் என்பது விதி. இந்த விதியை சுட்டிக்காட்டியே ஓ.பி.எஸ் சகோதரருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் விமானப்படை விமானத்தை வழங்கியது.

 

ஜூலை 1ந் தேதி விமானத்தை பயன்படுத்தியிருந்தாலும் ஜூலை 24 வரை ஓ.பி.எஸ் தரப்பு சுமார் 14.91 லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தவில்லை. கட்டணத்தை உரிய நேரத்தில் ஓ.பி.எஸ் தரப்பு செலுத்தியிருந்தால் தனக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டிருக்காது என்று நிர்மலா கருதியுள்ளார். ஆனால் உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்ததால் தான் பிரச்சனை பெரிதானதாக கருதி ஜூலை 24ந் தேதி ஓ.பி.எஸ்சை சந்திக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்  என்று சொல்லப்படுகிறது. 

இதனை தொடர்ந்தே ஜூலை 26ந் தேதி விமானத்தை பயன்படுத்தியதற்கான கட்டணத்தை செலுத்துவதாக ஓ.பி.எஸ் சார்பில் தமிழக அரசு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டுள்ளது. பிறகு ஆகஸ்ட் மாதம் 14ந் தேதி 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் பாதுகாப்புத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்த காரணத்தினால் ஓ.பி.எஸ் தரப்பு அவசர அவசரமாக பில் தொகையை செலுத்தியதாக சொல்லப்படுகிறது.இதனிடையே ஓ.பி.எஸ் சகோதரருக்கு விமானப்படை விமானத்தை பயன்படுத்தியதற்கு எதற்கு தமிழக அரசு சுமார் 15 லட்சம் ரூபாயை மக்களின் வரிப்பணத்தில் இருந்து எப்படி செலுத்தலாம் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
 

click me!