
ஜெயலலிதா சமாதிக்கு யார் போனாலும் அவர்கள் தங்கள் பதவியை இழந்து விட்டார்கள் என்று பிரபல பட்டிமன்ற நடுவரும், மேடை பேச்சாளருமான ஐ.லியோனி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவினர் பலர் ஏராளமாக கலந்து கொண்டனர். சிறப்பு பேச்சாளராக திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், இன்றைய அதிமுக ஆட்சி மோடியின் கைப்பாவையாகத்தான் நடக்கிறது. மோடி செல்வதைத்தான் எடப்பாடி செய்து வருகிறார். அமைச்சர்களும் அதிமேதாவிகளாக உள்ளனர்.
இந்த மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முழு உடல் பரிசோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். முதல்ல அந்த அம்மா உடலையே முழுமையாக பரிசோதனை செய்ய முடியாதவர்கள் முழு உடல் பரிசோதனை திட்டம் அறிவித்திருப்பது வியப்பாக உள்ளது என்றார்.
ஒவ்வொரு அமைச்சர்களும் ஒரு வழியில் செல்கிறார்கள். ஜெ.சமாதிக்குப்போன ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை இழந்தார். அடுத்துப்போன சசிகலா சிறைக்குப் போய்விட்டார். ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கலுக்குப் முன்பு அங்கே போனார். நிதி அமைச்சர் பதவி பறிபோனது. எடப்பாடி பழனிசாமி போனார்... தற்போது ஆட்சி ஊசலாடுகிறது.
ஜெயலலிதா சமாதிக்கு, யார் போனாலும் தங்கள் பவரை இழந்து விட்டார்கள். தூத்துக்குடி சம்பவத்தில் போராடியவர்களை 13 பேரை சுட்டக் கொன்ற பெருமை எடப்பாடி பழனிசாமியையே சேரும்.
மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரோத அரசுதான் நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு நேரம் எண்ணப்படுகிறது என்று ஐ.லியோனி பேசினார்.