மீண்டும் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்…. பசுமை வழிச்சாலைக்கு எதிராக கருத்து கூறியதால் நடவடிக்கை….

First Published Jun 17, 2018, 9:21 AM IST
Highlights
Actor Mansoor alikahan arrest by selam police


சென்னையில் இருந்து சேலத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள பசுமைவழிச்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலம் கூட்டம் ஒன்றில் பேசியதால் நடிகர் மன்சூர் அலிகான் இன்று தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்திட்டம் 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பசுமை வழிச்சாலை 8 வழிச்சாலையாக, சென்னை அருகிலுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சீபுரத்தில் 59.1 கி.மீ., திருவண்ணாமலையில் 123.9 கி.மீ., கிருஷ்ணகிரியில் 2 கி.மீ., தர்மபுரியில் 56 கி.மீ., மற்றும் சேலத்தில் 36.3 கி.மீ., என்று இம்மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளன.

இந்த சாலை அமைப்பதற்காக மொத்தம் சுமார் 2200 ஹெக்டேர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு கையகப்படுத்தும் போது அந்நிலங்களில் சுமார் 40 ஆயிரம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டியிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பசுமைவழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும், விவசாயிகளும் எதர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், பசுமை வழித்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினார்.

இந்நிலையில் சென்னை - சேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை வந்த , சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நடந்த பேராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!