ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி..! ஓங்குவது யார் கை? இபிஎஸ்சா? ஓபிஎஸ்சா?

By Selva KathirFirst Published Jun 25, 2021, 11:04 AM IST
Highlights

ராஜ்யசபா எம்பி பதவியை பொறுத்தவரை இந்த முறை ஓபிஎஸ் Vs இபிஎஸ் இருக்காது என்கிறார்கள். ஏற்கனவே அதிமுக கொங்கு மண்டல கட்சியாகிவிட்டது என்கிற விமர்சனம் உள்ளது. எனவே இந்த முறை கொங்கு மண்டலத்தையோ அல்லது வட மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கோ எம்பி பதவி கிடைக்காது என்கிறார்கள்.

தமிழகத்தில் ராஜ்யசபா எம்பி பதவிகள் 3 காலியாக உள்ள நிலையில் அவற்றில் ஒன்றை பெறுவது யார் என்பதில் அதிமுக அதிகார மையங்கள் இடையே பனிப்போர் தொடங்கியுள்ளது.

அதிமுக ராஜ்யசபா எம்பியாக இருந்த முகமது ஜான், உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த பதவி காலியானது. இதனை தொடர்ந்து ராஜ்யசபா எம்பிக்களாக இருந்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் எம்எல்ஏக்களானதால் எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் காலியாக உள்ள எம்பி பதவிகளின் எண்ணிக்கை மூன்றாக உள்ளது. இந்த பதவிகளை ஆறு மாத காலத்திற்குள் தேர்தல் ஆணையம் நிரப்ப வேண்டும். அந்த வகையில் அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த மூன்று பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் தற்போதுள்ள எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் மூன்று எம்பி பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், இரண்டை திமுகவும், ஒன்றை அதிமுகவும் பெற முடியும். ஆனால் மூன்று எம்பி பதவிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தினால் மூன்றையும் திமுகவே வெல்லும். குஜராத்தை முன்னுதாரணமாக காட்டி மூன்று எம்பி பதவிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் கதவுகளை திமுக ஏற்கனவே தட்டிவிட்டது. ஆனால் மூன்று எம்பி பதவிகளையும் திமுகவிற்கு விட்டுக் கொடுக்க டெல்லி விரும்பாது என்கிறார்கள். எனவே மூன்று எம்பி பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தி அதிமுகவிற்கு ஒரு எம்பி பதவியை பெற்றுக் கொடுக்க பாஜக நினைக்கும் என்கிறார்கள்.

அந்த வகையில் ஒரு எம்பி பதவி கிட்டத்தட்ட அதிமுகவிற்கு உறுதியாகிவிட்டது. எனவே அந்த எம்பி பதவி யாருக்கு என்று அதிமுகவில் விவாதங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே எம்பிக்களாக இருந்த மூன்று பேரில் இரண்டு பேர் எடப்பாடி ஆதரவாளர்கள். முகமது ஜான் மற்றும் வைத்திலிங்கம் எடப்பாடி தரப்போடு இணக்கமாக இருந்தவர்கள். கே.பி.முனுசாமி ஓபிஎஸ் தரப்போடு இருந்தவர். அந்த வகையில் கடந்த முறை இபிஎஸ கையே ஓங்கியிருந்தது. ஆனால் இந்த முறை அப்படி இல்லை என்கிறார்கள். கடந்த முறையை போல் இந்த முறை ஓபிஎஸ் விட்டுக் கொடுக்கமாட்டார் என்கிறார்கள். ஏற்கனவே எதிர்கட்சித் தலைவர், துணைத் தலைவர், கொறடா போன்ற விவகாரங்களில் எடப்பாடி கரங்களே ஓங்கின.

அதற்கு ஓபிஎஸ் ஒத்துழைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் ராஜ்யசபா எம்பி பதவி விவகாரத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளரை கை தூக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார். அதிலும் தென் மாவட்டத்தில் தனது சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை எம்பியாக்க வேண்டும் என்று அவர் உறுதியோடு உள்ளார். அதே சமயம் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்றோர் ராஜ்யசபா எம்பி கனவில் உள்ளனர். விரைவில் திமுக தங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் நிலையில் அதனை எதிர்கொள்ள எம்பி எனும் ஆயுதம் உதவும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இவர்கள் தவிர கே.சி.வீரமணி, சரோஜா போன்ற முன்னாள் அமைச்சர்களும் ராஜ்யசபா எம்பி ஆகும் கனவில் உள்ளனர்.

இவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இது குறித்து பேசி வருகின்றனர். ஆனால் ராஜ்யசபா எம்பி பதவியை பொறுத்தவரை இந்த முறை ஓபிஎஸ் Vs இபிஎஸ் இருக்காது என்கிறார்கள். ஏற்கனவே அதிமுக கொங்கு மண்டல கட்சியாகிவிட்டது என்கிற விமர்சனம் உள்ளது. எனவே இந்த முறை கொங்கு மண்டலத்தையோ அல்லது வட மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கோ எம்பி பதவி கிடைக்காது என்கிறார்கள். மேலும் அரசியல் எதிர்காலம் கருதி ஓபிஎஸ் விரும்பும் நபருக்கே எம்பி பதவியை இபிஎஸ் விட்டுக் கொடுப்பார் என்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ் தேர்வு செய்யும் நபர் எம்பி பதவிக்கு பொருத்தமானவரா என்பதை மட்டும் இபிஎஸ் பார்ப்பார் என்கிறார்கள்.

click me!