
வேண்டுமென்றே காலதாமதம் செய்வதற்காக தினகரன் கூடுதல் அவகாசம் கோரியிருந்தார் எனவும், டிசம்பர் 5ம் தேதி அதிமுகவில் தினகரன் உறுப்பினராக இல்லை எனவும் ஒபிஎஸ் - இபிஎஸ் அணியின் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து பன்னீர்செல்வமும் சசிகலா தரப்பும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது.
இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இரு தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வந்தது.
இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்தாலும் டிடிவி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது.
எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இறுதி விசாரணை வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி டிடிவி தரப்பு உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தது.
ஆனால் டிடிவி மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அக்.31 ஆம் தேதிக்குள் சின்னம் யாருக்கு என உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, வேண்டுமென்றே காலதாமதம் செய்வதற்காக தினகரன் கூடுதல் அவகாசம் கோரியிருந்தார் எனவும், டிசம்பர் 5ம் தேதி அதிமுகவில் தினகரன் உறுப்பினராக இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், இரட்டை இலை எங்களுத்தான் வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.