
காவல்துறைக்கு வாக்கி-டாக்கி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், இதுகுறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவல்துறையினரின் தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், வாக்கி டாக்கி கொள்முதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், வாக்கி-டாக்கி வாங்கும் விஷயத்தில் மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளதாகவும், இது அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகம் எனவும்கூறியுள்ளார்.
மேலும், ரூ.83.45 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ள நிறுவனத்திற்கு, ஒப்பந்தம் பெறுவதற்கான அடிப்படைத் தகுதியான தகவல் தொடர்பு கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான உரிமம் கூட இல்லை எனவும், அந்த உரிமத்தை 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வாங்கித் தருவதாக அந்த நிறுவனம் உத்தரவாதம் அளித்ததை ஏற்று இந்த ஒப்பந்தத்தை காவல்துறை வழங்கியிருக்கிறது குற்றம் சாட்டியுள்ளார்.
இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருந்க்கிறது எனவும், எனவே, காவல்துறைக்கு வாக்கி-டாக்கி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த ஊழல் குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.