Omicron Virus: ஒமிக்ரான் 3வது அலையின் அறிகுறியா? மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட மத்திய அரசு.!

By vinoth kumarFirst Published Nov 29, 2021, 8:57 AM IST
Highlights

ஹாட்ஸ்பாட்களை விரைவாக வரையறுக்க வேண்டும். அதிகரிக்கும் பாதிப்புகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். 5 சதவீதத்திற்கும் குறைவான தொற்று விகிதத்தை அடைவதை மாநிலங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்.

புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியாக தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா முதல் அலையை இரண்டாவது அலை பெரும் பாதிப்பும் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும் தடுப்பூசியால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உயிரிழப்பும் பெரமளவு குறைக்கப்பட்டது. அப்படி இருந்த போதிலும் கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து வீரியமாக பரவி வருவதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.  அவ்வகையில், புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது மிகவும் விரீயம் மிக்கதாகவும் தடுப்பூசி இதனை கட்டுப்படுத்தாது என்று கூறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் குறித்த அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல், கண்காணிப்பை அதிகரித்தல், மேம்பட்ட சோதனை, ஹாட்ஸ்பாட்களை அடையாளம் காணுதல், தடுப்பூசி வேகத்தை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள  மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்த வைரஸ் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், மாநில அரசுகளின் முதன்மை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* நாட்டில் நோய் கண்காணிப்பு அமைப்பு வலுவாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், குறிப்பாக ஆபத்துமிக்க நாடுகளாக மத்திய அரசால் வகைப்படுத்தப்பட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

* சர்வதேச விமானங்கள் மூலம் வரும் பயணிகளின் கடந்த கால பயண விவரங்களைப் பெறுவதற்கான வழிமுறை ஏற்கனவே உள்ளது. இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

* ஆபத்துமிக்க நாடுகளில் இருந்து பயணிகளை அனுமதிப்பதில் மத்திய அரசின் நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

* புதிய கொரோனா வைரசின் மாறுபாட்டை திறம்பட நிர்வகிப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை கடுமையாக அமலாக்க வேண்டும். சேகரிக்கப்படும் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கான உடனடியாக மத்திய அரசின் ஆய்வகங்களுக்கு அனுப்பபட வேண்டும்.

* புதிய வைரசின் தடுக்க போதுமான சோதனைகள் வேண்டும். போதுமான சோதனைகள் இல்லாத நிலையில், தொற்று பரவலின் உண்மையான அளவைக் கண்டறிவது மிகவும் கடினம். எனவே மாநிலங்கள் பரிசோதனை உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

* ஹாட்ஸ்பாட்களை விரைவாக வரையறுக்க வேண்டும். அதிகரிக்கும் பாதிப்புகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். 5 சதவீதத்திற்கும் குறைவான தொற்று விகிதத்தை அடைவதை மாநிலங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்.

* டிசம்பர் 1ம் தேதி முதல் விமான நிலையத்திலேயே பயணிகள் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

* தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தென்னாப்ரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை 8 நாட்களுக்குப்பின் மீண்டும்  பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!