ஆட்சி,அதிகாரம் குடும்பத்தின் கைகளுக்கு போனாலே, ஆபத்தில் தான் போய் முடியும் என்று திமுகவை கண்டித்து இருக்கிறார் முன்னாள் எம்.பி.
நாமக்கல் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம், இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள அலவாய்ப்பட்டியில், நடைபெற்றது. மாவட்ட பாஜக தலைவர் என். பி. சத்தியமூர்த்தி, தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாஜக மூத்த நிர்வாகியுமான டாக்டர் கே. பி. இராமலிங்கம், மாவட்ட பார்வையாளர் டாக்டர் சிவகாமி பரமசிவம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது, இம்மாவட்டத்தில் பாஜக செயல்பாடுகள், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளுதல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
undefined
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாஜக மூத்த நிர்வாகியுமான டாக்டர் கே. பி. இராமலிங்கம், ‘தேசிய அளவில் கட்டுப்பாடு மிகுந்த ஒரு கட்சியாக பாஜக திகழ்ந்து வருகிறது. அதனால் தான் உலகம் போற்றும் பிரதமரை இந்த கட்சி தந்துள்ளது. கட்சியில் உறுப்பினராக உள்ள ஒவ்வொருவருக்கும் பாரம்பரிய பெருமை உள்ளது. கட்சியில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தன்னலம் பாராமல் மக்கள் சேவையை ஒன்றையே தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
உலகில் அதிக அளவில் 120 கோடி தடுப்பூசிகளைப் போட்ட மாபெரும் இயக்கத்தை மத்திய அரசு செய்து வருகிறது. உலக நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கி முன்னுதாரணமாக திகழ்கிறது. எதிர்க்கட்சிகள் தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் பல தவறான தகவலை கூறியபோதும், அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் தரமான கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை இன்று மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு திட்டங்களை அறிவிப்பது மட்டுமல்லாமல் அவற்றை முழுமையாக மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது.
அடுத்து வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வினர் மக்கள் நலனுக்காக போட்டியிடுகிறார்கள். நகர்ப்புற தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். நாட்டின் ஆட்சி அதிகாரம் ஒரு குடும்பத்திற்கு செல்லும்போது அது ஆபத்தாக முடியும். இதைத்தான் அரசியல் சாசன சட்ட தின உரையின்போது பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு எதிராக அமைந்து விடும். எனவே குடும்ப அரசியலில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும்.ஆட்சி,அதிகாரம் குடும்பத்தின் கைகளுக்கு போனாலே, ஆபத்தில் தான் போய் முடியும்’ என்று திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.