
கட்சியில் இருந்து விலகுவதாக இருந்தாலும் சரி, தனிக்கட்சி தொடங்குவதாக இருந்தாலும் சரி, சட்டமன்ற குழுவை கூட்டுவதாக இருந்தாலும் சரி, ஜெயிலுக்கு போவதாக இருந்தாலும் சரி, கூட்டணி அமைப்பதாக இருந்தாலும் சரி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதாக இருந்தாலும் சரி, எதற்கெடுத்தாலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதை புது டிரன்டாக மாற்றி வருகின்றனர் அரசியல்வாதிகள்.
அந்த வரிசையில் தற்போது ஜெயலலிதா சமாதிக்கு வந்துள்ளார் ஜெ.தீபா கணவர் மாதவன்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்களும் போட்டிகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சசிகலா பொதுச்செயலாளராகவும் முதலமைச்சராக பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றனர்.
ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நிலைக்க வில்லை. அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வானபோது ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பதவியை ராஜினாமா செய்த ஓ.பி.எஸ் கொதித்தெழுந்து ஜெயலலிதா சமாதியை நோக்கி படையெடுத்தார்.
தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் சசிகலா ஜெயலலிதா சமாதிக்கு சென்று சபதம் எடுத்தார். பின்னர் சிறைக்கு சென்றார்.
சிறைக்கு செல்லும் முன்பு சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடியையும், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரனையும் தேர்வு செய்து விட்டு சென்றார்.
அதேபோல் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற போதும் ஜெ. சமாதியில் பூ வளையம் வைத்தார்.
போதாதகுறைக்கு 2017 - 2018 ஆம் ஆண்டிகான பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் ஜெயகுமார் ரெடியானார்.
இதனிடையே ஜெயலிதா அண்ணன் மகள் தீபா ஓ.பி.எஸ் ஆதரவு தெரிவிப்பதுபோல் பன்னீர்செல்வத்தை ஜெ. சமாதிக்கு வரவழைத்து இருவரும் அதிமுகவின் இருகரங்களாக செயல்படுவோம் என பேட்டியளித்தார்.
ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. பிப்ரவரி 24 ஆம் தேதி எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கினார் தீபா. இந்த நிகழ்வின்போதும் ஜெ.சமாதி தேவைப்பட்டது.
இதன்வரிசையில் ஜெ. தீபாவின் கணவர் ஜெ.சமாதியில் அமர்ந்து அஞ்சலி செலுத்தினார்.
புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தமிழகத்திற்கு வந்த சோதனையா வேதனையா என்று தான் தெரியவில்லை.