#Breaking : AIADMK : அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் யார்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

By Narendran SFirst Published Dec 6, 2021, 4:16 PM IST
Highlights

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வானதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வானதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்துள்ளனர்.அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் மாற்றப்பட்டது. மேலும்,பொதுச்செயலாளர் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் என்றும், 8 ஆம் தேதி அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மேலும் மனுக்கள் 5 ஆம் தேதி காலை பரிசீலிக்கப்படும் என்றும் 6 ஆம் தேதி மாலை 4 மணிவரை மனுவை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் கட்சியின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வந்து மனுத்தாக்கல் செய்தனர். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்பு மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

இதை அடுத்து ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் போட்டியின்றி தேர்வாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள அதிமுகவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்குத் தடை விதிக்க கோரி, சில நாட்களுக்கு முன் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது. இந்நிலையில், அதிமுக உறுப்பினரான ஜெயச்சந்திரன் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இதை அடுத்து இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!