பேசித் தீர்த்துக்கொள்வோம் எனும் ஓ.பன்னீர்செல்வம்... அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் கிரீன் சிக்னலா..?

By Asianet TamilFirst Published Jan 18, 2021, 9:15 PM IST
Highlights

அதிமுகவில் உள்ள அண்ணன் - தம்பி பிரச்னையைப் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழா தொடர்பாக அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான பன்னீர்செல்வம் பங்கேற்ற்ய் பேசினார். 
“ஒவ்வோர் ஆண்டும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு பிள்ளையார் சுழி போடுவதே அம்மா பேரவைதான். யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கியிருக்கிறார். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமைதான். கட்சி தொடங்கபட்ட 50 ஆண்டுகளில் அதிமுகவுக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆளும் உரிமையை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அந்தப் பெருமை அதிமுகவுக்கு மட்டுமே உண்டு.
ஜெயலலிதா காட்டிய வழியைப் பின்தொடர்ந்தால் நம்மை வெல்ல யாரும் கிடையாது. தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அண்டக் கட்சிகளுக்கெல்லாம் தலைவர்களும் உள்ளார்கள். அவர்களுடைய பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று நாம் பார்க்கிறோம். ஆனால், ஜெயலலிதா பிறந்த நாளில் மட்டும்தான் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம்.
நாம் ஆயிரம் பேருக்கு உதவிகள் செய்தால்தான் நம்மை பார்த்து மற்ற கட்சிகள் ஒன்றிரண்டு உதவியாவது செய்வார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையோடு உழைத்து வெற்றியைப் பெறுவோம். அதிமுகவில் உள்ள அண்ணன் தம்பி பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்வோம். வெற்றி மட்டுமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார். சசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ளார். இந்நிலையில் அண்ணன் - தம்பி பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்வோம் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். இது சசிகலாவுக்கான சமிக்கையா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

click me!