துரோகத்திற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்த வங்கப் புலி.. 2 தொகுதிகளில் போட்டியிடபோவதாக மம்தா அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2021, 5:46 PM IST
Highlights

பதவியையும், சுகத்தையும் அனுபவித்தவர்கள் நன்றி மறந்து வேறு கட்சிகளுக்கு சென்றுள்ளனர். இது குறித்து எனக்கு எந்த வருத்தம கவலையோ இல்லை. அவர்களை நம்பி இந்த கட்சி இல்லை. 

திரிணாமுல்  காங்கிரஸின் அமைச்சர் பதவியை உதறிவிட்டு பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். வாய்ப்பு இருந்தால் பவானிப்பூர், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட திட்டம் வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்

கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் டாடா நிறுவனம் கார் தொழிற்சாலை அமைக்க மக்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்த முயற்சித்தபோது அதை கடுமையாக எதிர்த்ததால் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை  மக்கள் ஆட்சி பீடத்தில் அமர்த்தி அழகு பார்த்து வருகின்றனர்.மக்கள் செல்வாக்கு மிகுந்த முதல்வராக மம்தா பானர்ஜி இருந்துவருகிறார். நந்திகிராம் போராட்டத்தின்போது மம்தாவுக்கு துணை நின்றவர் சுவேந்து அதிகாரி ஆவார், எனவே மம்தா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சுவேந்து அதிகாரிக்கு முக்கிய அமைச்சர்  பதவியை வழங்கினார். 

தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசிலும் ஆட்சி அதிகாரத்திலும் செல்வாக்கு மிகுந்த தலைவராகவும் வலம் வந்தார் சுவேந்து. இந்நிலையில் திடீரென மம்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது அமைச்சர் பதவியை உதறிய சுவேந்து  உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் திடீரென பாஜகவில் இணைந்தார். இது மம்தாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் டிசம்பர் 19 அன்று, , முன்னாள் எம்.பி. சுனில் மண்டல், முன்னாள் எம்.பி. தஷ்ரத் டிர்கி மற்றும் 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இவர்களில் 5 எம்.எல்.ஏ.க்கள் டி.எம்.சி. முன்னதாக, தப்ஸி மண்டல், அசோக் திண்டா, சுதீப் முகர்ஜி, சைக்காட் பன்ஜா, ஷிலாபத்ரா தத்தா, தீபாலி பிஸ்வாஸ், சுக்ரா முண்டா, ஷியம்பதா முகர்ஜி, பிஸ்வாஜித் குண்டு மற்றும் பனாஷ்ரீ மைதி ஆகியோர் கடந்த மாதம் பாஜகவில் இணைந்தனர். 

இந்நிலையில் பாஜகவை எதிர்த்து நந்திகிராமில் மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் வெளியேறியுள்ளனர். பதவியையும், சுகத்தையும் அனுபவித்தவர்கள் நன்றி மறந்து வேறு கட்சிகளுக்கு சென்றுள்ளனர். இது குறித்து எனக்கு எந்த வருத்தம கவலையோ இல்லை. அவர்களை நம்பி இந்த கட்சி இல்லை. இந்த கட்சி அவர்கள் உருவாக்கிய கட்சியும் அல்ல. இத்தனை ஆண்டுகள் தாங்கள் கொல்லையடித்து சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவர்கள் பாஜகவுடன் இணைந்துள்ளனர். வழக்கம் போல என்னுடைய சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நந்திகிராமில் இருந்துதான் தொடங்குகிறது. அது எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய தொகுதி. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் நான் நந்திகிராமத்தில் போட்டியிட போகிறேன். அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரிடம் கூறியிருக்கிறேன். 

வாய்ப்பிருந்தால் நான் மற்றோரு தொகுதியான பவானிபூர் தொகுதியிலும் போட்டியிட திட்டம் வைத்துள்ளேன். நான் ஒருபோதும் மேற்குவங்க மாநிலத்தை பாஜகவிடம் விற்கமாட்டேன். விட்டுக் கொடுக்க மாட்டேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை மேற்குவங்கத்தை நான் பாதுகாப்பேன் என அவர் சூளுரைத்துள்ளார். கிழக்கு மிட்னாபூரில் உள்ள நந்திகிராம் சுபேந்துவின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்நிலையில்  மம்தா பானர்ஜி அங்கு போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது. மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக கருதப்படுகிறது.
 

click me!