சசிகலாவின் காலில் விழுந்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அதிமுக அமைச்சர்களை வெறுப்பேற்றிய ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2021, 4:44 PM IST
Highlights

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இட்லி சாப்பிட்டார் ஜூஸ் குடித்தார் என்று அனைத்து அமைச்சர்களும் பொய் கூறினார்கள். ஜெயலலிதா உயிரோடு இல்லாததால்  சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனையில் இருந்து தப்பித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற  மக்கள் கிராம ‌சபையில் திமுக தலைவர் ‌மு.க ஸ்டாலின் பங்கேற்று அதிமுக வை நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் மாரண்ட அள்ளி அருகே தூள்செட்டி ஏரி பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் ‌பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 

பெண்கள் அதிகளவில் திரண்டு வந்திருப்பது மிகவும்‌ மகிழ்ச்சியளிக்கிறது. திமுகவின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் கிராம‌சபையை நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க
பெண்கள் அதிகளவு திரண்டு வருவதால் அதிமுக அரசு கிராம சபையை தடுத்து வருகிறது. கடந்த பத்து வருட அதிமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. நான்கு மாதங்களில் ‌ஆட்சி மாற்றம் ஏற்படும். நாங்க ரெடி. நீங்க ரெடியா என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார்.பின்னர் இறுதியாக பேசிய அவர்,  மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் திமுக அட்சிக்கு வந்தவுடன் நிறைவெற்றப்படும் என உறுதியளித்தார்.  மாற்றுத்திறனாளி என்று கலைஞர் பெயர் சூட்டியதையையும் அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியதையும் நினைவு கூர்ந்தார்.  திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவை தருமபுரியில் தொடங்கியதாக குறிப்பிட்டார். 

மேலும் திமுக ஆட்சியில் தருமபுரி மக்களின் தாகத்தைத் தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை  செயல்படுத்தியதாக கூறினார். துணை முதல்வராக இருந்த தான் இத்திட்டத்திற்காக ஜப்பான் வரை சென்று தேவையான நிதியை வாங்கி வந்தேன் என்று கூறினார். இத்திட்டப்பணிகளை தானே நேரில் வந்து கவனித்து வந்ததாக கூறினார். ஆனால் அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக பணிகளை கிடப்பில் போட்டது. சட்டமன்றத்தில் பல முறை கேள்விக்கேட்டும் உரிய பதில் இல்லை. எனவே பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தினோம்.  அதற்கும் பதில் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன்‌ அடுத்த நான்கு ஐந்து மாதங்களில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மேலும் பல்வேறு பகுதிகளுக்கும் நீர் கொண்டு வரப்படும் என்றார். 

உயர்கல்வித்துறை அமைச்சர் அண்ணா பல்கலைக்கழகத்தை பாதுகாக்காமல் மத்திய அரசுக்கு தாரை வார்க்க அனுமதித்தார். நாங்கள் போராடிய பிறகே அந்த திட்டம் கைவிடப்பட்டது. கே.பி அன்பழகன் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்யும் போது அலையாளம் பகுதியிலிருந்து- தூள் செட்டி ஏரிக்கு  நீர்க்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி இந்த திட்டம் நிறைவேற்ற படும் என்று உறுதியளித்தார். ( அந்த காட்சிகள் திரையில் இரண்டு முறை ஒளிப்பரப்பு செய்யப்பட்டது) கடந்த நான்கு ஆண்டுகளில் இத்திட்டதிற்காக ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் வராத நீட் தேர்வு, ஜெயலலிதா ஆட்சியிலும் வராத நீட் தேர்வு எடப்பாடி காலத்தில் தான் அமல்படுத்தப்பட்டது. இதனால் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் கே.பி.அன்பழகன் நீட் தேர்வுக்கு பெறுப்பேற்க வேண்டும். 

தருமபுரி மாவட்டத்திற்கு தொழில்பேட்டை அமைக்கப்படவில்லை. இந்த மாவட்டத்தில் அமைச்சரில்லாமல் அமைச்சராக ஒருவர் (கே.பி.முனுசாமி) வலம் வருகிறார். சமையல் எரிவாயு, அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க அதிமுக அரசு தவறிவிட்டது என்று குற்றம்சாட்டினார். அண்ணா எம்.ஜி.ஆர் ஆகியோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் தினமும் மக்களிடம் மருத்துவ அறிக்கையை தெரிவிப்பார்கள். ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இட்லி சாப்பிட்டார் ஜூஸ் குடித்தார் என்று அனைத்து அமைச்சர்களும் பொய் கூறினார்கள். 

ஜெயலலிதா உயிரோடு இல்லாததால்  சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனையில் இருந்து தப்பித்தார். சிறைக்கு செல்ல இருந்த சசிகலா வின் காலில் விழுந்த காரணத்தால்தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார். பதவியை இழந்த பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரினார். நான்கு வருடங்களாக இதுவரை விசாரணையில் எந்த முடிவும் இல்லை. சம்மன் அனுப்பியும் பன்னீர்செல்வம் நேரில் ஆஜராக இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா வின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கித்தருவேன் என்று கூறினார்.
 

click me!