9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2021, 12:36 PM IST
Highlights

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும், விருப்பம் உள்ள மாணவர்களே பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், மேசைகள் ஆகியவற்றை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு தெரிவித்துள்ளது.  

கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் நாளை திறக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு சந்திக்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவு எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுநோயின் தாக்கம் தற்போது சற்று குறைந்திருக்கும் சூழ்நிலையில், பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அந்தக் கருத்தின் அடிப்படையில் 19ஆம் தேதி (நாளைமுதல்) பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு  விதிமுறைகளின்படி, பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வரவேண்டும், வகுப்பறைக்கு உள்ளே முகக் கவசம் அணிவது கட்டாயம், தனியார் பள்ளிகளை திறப்பதற்கு முன் அரசிடம் உரிய அனுமதி பெறவேண்டும். 

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும், விருப்பம் உள்ள மாணவர்களே பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், மேசைகள் ஆகியவற்றை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு தெரிவித்துள்ளது. இதை கண்காணிக்க பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில் சென்னை செனாய் நகரில் உள்ள திரு.வி.கா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தமிழக அரசு அறிவித்துள்ளபடி நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டு, அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறக்கப்படுகிறது. எனவே நாளை மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக்குப் பிறகே மாணவர்கள் வகுப்பறைகளில் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார். 

 

click me!