ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ராகு கேது சிறப்பு பூஜை செய்துள்ளார்
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை நம்பர் 2 இடத்தில் இருந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நம்பர் 1 ஆக முயற்சித்து தோல்வியை சந்தித்தார். அணிகள் இணைப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராகி நம்பர் 1ஆகிவிட, ஓபிஎஸ் மீண்டும் நம்பர் 2 ஆனார். ஆனால், தற்போது அதிமுகவில் இருந்தே தூக்கி எறியப்பட்டுள்ளார்.
கட்சியை எப்படியாவது கைப்பற்றி விடலாம் என்று அவர் எடுத்து வைக்கும் அத்தனை முயற்சிகளிலும் பின்னடைவையே சந்தித்து வருகிறார். கட்சி நிர்வாகிகள் கைவிட்டபோது, நீதிமன்றப் படியேறினார். ஆனால், அங்கும் பலனில்லை. டெல்லி பகவான் கைகொடுப்பார் என எதிர்பார்த்த சாந்த சொரூபிணியான அவருக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால், விரக்தியின் உச்சத்துக்கே சென்ற முன்னாள் முதல்வர் முதல்வர் ஓபிஎஸ், நேரடியாக கடவுளிடமே முறையிட திட்டமிட்டு, ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜை செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்தபோது, அதிமுக - பாஜக கூட்டணி விரிசலால் காற்று தற்போது லேசாக ஓபிஎஸ் பக்கம் அடிப்பது போல இருக்கிறது. இதனை தன் பக்கம் திடமாக வீச வைக்கவே இந்த சிறப்பு பூஜை என்கிறார்கள்.
சந்திராயன்-3க்கு பாராட்டு; இஸ்ரோவுக்கு வாய்ப்பூட்டா? சு.வெங்கடேசன் எம்.பி., காட்டம்!
ஓபிஎஸ்சுக்கு அண்மைக்காலமாகவே நேரம் சரியில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கட்சியிலும் சரி, குடும்பத்திலும் சரி அவருக்கு அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அவருக்கு எதுவுமே சாதகமாக நடப்பதில்லை என்பதால், தனது ஆஸ்தான ஜோசியர்களை வரவழைத்து தனது ஜாதக பலன்களை பார்த்துள்ளார். அவரது ஜாதகத்தை பார்த்த அவர்கள், ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறியுள்ளனர். அத்துடன், காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே கோயிலில் அவர் சிறப்பு பூஜை செய்துள்ளார் என்கிறார்கள்.
காளஹஸ்தி கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. வளர்ச்சி, வளமான வாழ்வு என அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கே செய்யப்படும் பரிகார பூஜைகள் தீர்வாக அமைகின்றன. ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும், அதற்கு நிரந்தர தீர்வாக இங்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை செய்தால் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, இந்த சிறப்பு பூஜைக்கு பின்னர் ஓபிஎஸ்சுக்கு ஏறுமுகமாக இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.