அதிமுக-வில் மூன்று கொடிகள் உள்ள நிலையில், எந்த கொடியை பயன்படுத்த தடை கோருகிறார் என எடப்பாடி பழனிசாமி வழக்கில் விளக்கவில்லை. அண்ணா விரல் காட்டுவது தான் உண்மையான கொடி என்பதால் அதை ஒபிஎஸ் பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரிய ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிரான பிரதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், நீக்கத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மேல்முறையீடு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தகுதி நீக்கம் செல்லும் என ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு என வாதத்தை தொடங்கினார்.
கொடி, சின்னம் பயன்படுத்த கூடாது என்ற தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு சமமானது என்றும், இடைக்கால உத்தரவின் அடிப்படையில் தடை விதிக்க முடியாது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். பிரதான வழக்கு நவம்பர் 30ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ஒ.பி.எஸ். தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், அதிமுக-வில் மூன்று கொடிகள் உள்ள நிலையில், எந்த கொடியை பயன்படுத்த தடை கோருகிறார் என எடப்பாடி பழனிசாமி வழக்கில் விளக்கவில்லை. அண்ணா விரல் காட்டுவது தான் உண்மையான கொடி என்பதால் அதை ஒபிஎஸ் பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆதரவாக தனக்கு உள்ளதாகவும், அவர்கள் நீக்கப்படாத நிலையில், அவர்களுக்கும் எப்படி தடை விதிக்க முடியுமென வாதிடப்பட்டது. மேலும் ஒபிஎஸ் ஆதரவாளர்களின் கைகளில் கட்சி சின்னமான இரட்டை இலையை பச்சை குத்தி உள்ள நிலையில், தனி நீதிபதி உத்தரவால் அதை நீக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்று கூறி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லுமா செல்லாதா என்பது குறித்து பிரதான சிவில் வழக்கில் தான் முடிவெடுக்க முடியும். பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதையும் நீதிபதிபதிகளிடம் வழக்கறிஞர் அப்துல் சலீம் சுட்டிக்காட்டினார். எந்த காரணமும் குறிப்பிடாமல் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு செல்லத்தக்கதல்ல என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக எந்த நேரடி உத்தரவும் இல்லாதபோது, அவர் தாக்கல் செய்த தனக்கு எதிராக தடை கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல இல்லை எனவும் ஒபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. பதில்மனு தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும், அதுவரை தடை உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு முறை அவகாசம் கோரிய ஓபிஎஸ் தரப்பு மீண்டும் அவகாசம் கோரியதாகவும், பதில்மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை என்பதை அறிந்த பிறகே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வாதத்தை தொடங்கினார். கட்சியில் இருந்து நீக்கியதை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளதாகவும், பொதுக்குழு தீர்மானத்தின்படி கட்சியில் இல்லை. பதில்மனுவும் தாக்கல் செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டி, கட்சியில் உறுப்பினராக இல்லாத போது அதன் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த முடியும் என வாதிட்டார்.
இன்னும் ஒருங்கிணைப்பாளர் என கூறும் ஒபிஎஸ், கட்சியின் பொதுச் செயலாளரை நீக்குகிறார் என சுட்டிக்காட்டியதுடன், அவருக்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்களெல்லாம் அவருக்கு இல்லை. அப்படி இருப்பதாக கூறினாலும் முகம் தெரியாத அவர்களை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என்பதால், அவர்கள் யாரையும் கட்சியில் இருந்து நீக்கி அறிவிக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இடைக்கால தடை உத்தரவை எதிர்த்த இந்த மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், நவம்பர் 30ம் தேதி வரை காத்திருக்காமல், தனி நீதிபதியிடமே தடையை நீக்க கோருவதற்கு எந்த தடையும் இல்லாத நிலையில், மறுநாளே தடையை நீக்கும்படி கோரியிருக்கலாம் என வாதிட்டார். இந்த இடைக்காலத் தடை உத்தரவு இறுதியானதல்ல என்றும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு தடை விதிக்கவில்லை என்பன உள்ளிட்ட காரணங்களை தனி நீதிபதி விளக்கிய பிறகுதான் உத்தரவை பிறப்பித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 30 ஆண்டுகளாக கட்சியில் உள்ள ஓபிஎஸ் எந்த கொடியை பயன்படுத்த தடை கோருகிறார்கள் என தெரியவில்லை என கூறுவது வினோதமாக உள்ளதாகவும், இன்னும் எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் என்று கூறியே அறிக்கை வெளியிடுவதாகவும் இபிஎஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்ததையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அதிமுக கட்சியின் சொத்துகளான கட்சி கொடி, லெட்டர் பேடு ஆகியவை யாருக்கும் சொந்தமானதல்ல என்பதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை வைத்தார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சியினரை நீக்க ஒபிஎஸ்-க்கு அதிகாரம் உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தடையை எதிர்த்து ஒபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.