
தர்மயுத்தத்தில் ஓபிஎஸ்...
அதிமுக பொதுச்செயலாளராகவும், முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த முதலமைச்சர் பதவியை சசிகலா ஏற்க நினைத்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ் வழங்கிய நிலையில், திடீரென ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் மேற்கொண்டார். அப்போது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்து நீதி விசாரணை கேட்டிருந்தார். இதனையடுத்து ஓபிஎஸ் -சசிகலா என இரு அணிகள் பிரிந்த நிலையில், ஓபிஎஸ்க்கு ஆதரவாக அதிமுக மூத்த நிர்வாகிகளாக அவைத்தலைவர் மதுசூதனன், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஜேசிடி பிரபாகர், அப்போதைய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 சட்டமன்றஉறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதற்க்கு முக்கிய காரணமாக சசிகலா மேல் உள்ள எதிர்ப்பு மற்றும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் என கூறப்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ் அணியோடு இபிஎஸ் அணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டனர். அப்போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவியும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. கல்வித்துறை அமைச்சர் என்ற உயர் பொறுப்பில் இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி துறை மட்டுமே ஒதுக்கப்பட்டது.
ஒற்றை தலைமையில் ஓபிஎஸ்
மேலும் தன்னை நம்பி வந்த நிர்வாகிகளுக்கு உரிய முறையில் பொறுப்பும், பதவியும் ஓ.பன்னீர் செல்வம் வாங்கித்தரவில்லையென புகார் கூறப்பட்டது. 11 சட்ட மன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. மேலும் தர்மயுத்தத்தின் போது ஓபிஎஸ்க்கு பக்க பலமாக இருந்த கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் ஆகியோரும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தது ஓபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஓபிஎஸ்க்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், வேளச்சேரி அசோக், குன்னம் ராமசந்திரன், அரியலூர் தாமரை ராஜேந்திரன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர். இதன் காரணமாக ஓபிஎஸ் தரப்பு- இபிஎஸ் தரப்பு என பிரிந்து உள்ளது, இருந்த போதும் 95% மாவட்ட செயலாளர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதால் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது
இதையும் படியுங்கள்