அய்யோ இந்த துயரத்திற்கு முடிவே இல்லையா..?? தலையில் அடித்துக் கதறும் விஜய் வசந்த் எம்.பி.

By Ezhilarasan BabuFirst Published Dec 22, 2021, 10:34 AM IST
Highlights

இந்த சம்பவத்தைக் கண்டித்து மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களில் 14 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வஸந்த் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இலங்கைக்கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 69 பேர் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களைத் தாக்குவதும், படுகொலை செய்வதும், மீனவர்களின் உடமைகளைப் பறிப்பதும், கைதுசெய்வதுமான இலங்கை கடற்படையின் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 55 பேரையும், புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரையும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த மூன்று நாட்களில் அடுத்தடுத்து கைது செய்திருப்பதோடு மட்டுமல்லாது, அவர்களது படகுகளையும் இலங்கைக்கடற்படையினர் பறிமுதல் செய்திருப்பது அம்மீனவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் கலக்கத்தையும், சக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திவரும் தொடர் வன்முறைத்தாக்குதல்களும், படகுகளைப் பறித்து கொள்ளும் செயல்களும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீனவர்களை நடுக்கடலில் வைத்துத் தாக்குவதும், கடலுக்குள் தள்ளி விடுவதும், ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவதும், அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வதும், மீன்களைக் கடலில் வீசியெறிவதும், வலைகளை அறுத்தெறிவதும், படகுகளைச் சேதப்படுத்துவதும், சிறைப்பிடிப்பதும், துப்பாக்கிச்சூடு நடத்துவதும் என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் கொடுமைகள் சொல்லி மாளாது. இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத்தாக்குதல்கள் யாவும் தமிழர்கள் மீதான இனவெறிப்பாகுபாட்டின் வெளிப்பாடே என. தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக்கடற்படையினரின் இத்தகையத் தாக்குதலை பல அரசியில் கட்சியினரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலயில்,

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வஸந்த் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- பாரம்பரியமாக வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்துப் பிழைப்பு நடத்திவரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யப்படும் நடவடிக்கை தொடர் கதையாக உள்ளது. மீனவர்கள் மீது தாக்குதல். படகுகளைச் சேதப்படுத்துவது. மீன்பிடி வலைகளை அறுப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ராமேஸ்வரம் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 55 மீனவர்களையும். 8 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து அவர்களைக் கைது செய்துள்ளது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களில் 14 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த மூன்று தினங்களில் மட்டும் 69 மீனவர்களையும் 10 விசைப் படகுகளையும் சிறைபிடித்து உள்ள இலங்கை கடற்படை உடனடியாக அதனை விடுவிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதோடு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் இலங்கை அரசுக்குத் தனது கண்டனங்களையும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும் மீனவர்கள் குறித்த பிரச்சினையில் செவிசாய்த்து அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு மீனவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.


 

click me!