Maridhas : மாரிதாஸ் மீது அடுத்த புகார்.. தமிழகத்துக்கு ஆபத்தானவர் மாரிதாஸ்.. எச்சரிக்கும் திருமுருகன் காந்தி!

By Asianet TamilFirst Published Dec 22, 2021, 8:30 AM IST
Highlights

50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால், அவமானகரமாக பேசுவதையும், அக்கட்சிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்றும் தீவிரவாத கட்டமைப்பை உருவாக்கி வருவது போலவும் மாரிதாஸ் குற்றம் சாட்டி பேசி வருகிறார்.

யூடியுபர் மாரிதாஸ் போன்றவர்கள் தமிழகத்துக்கு ஆபத்தானவர்கள் என்றும் தவறான தகவல்களைப் பரப்பி வரும் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படியும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. ஆனால், போர்ஜரி வழக்கு ஒன்றிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதுதவிர நெல்லையில் பதியப்பட்ட ஒரு வழக்கிலும் கைது செய்யப்பட்டு மாரிதாஸ் சிறையில் உள்ளார். இந்நிலையில் மாரிதாஸ் மீது மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகார் அளித்த பிறகு செய்தியாளர்களுக்கு திருமுருகன் காந்தி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள், திராவிட சிந்தனையாளர்கள் போன்றவர்களை சமூக விரோதிகளாக சித்தரித்து யூடியூபில் மாரிதாஸ் பதிவிட்டு வருகிறார். பொய்யான, எந்த ஆதாரமும் இல்லாமல் இஷ்டப்படி அவதூறாகப் பேசுவது அவர் வழக்கம். தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதைப் போலவும், ஹவாலா பணம் எங்களுக்கு வருகிறது என்றும் பேசியிருக்கிறார். 50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால், அவமானகரமாக பேசுவதையும், அக்கட்சிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்றும் தீவிரவாத கட்டமைப்பை உருவாக்கி வருவது போலவும் மாரிதாஸ் குற்றம் சாட்டி பேசி வருகிறார். 

பொய்யான தகவல்களை, வதந்திகளை பரப்பும் மாரிதாஸ் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்றவர்களை யாரும் ஆதரிக்கக் கூடாது. மாரிதாஸ் போன்றவர்கள் தமிழகத்துக்கு மிகவும் ஆபத்தானவர்கள். கடந்த அதிமுக ஆட்சியில் அவர் மீது தொடர்ந்து புகார் அளித்தோம். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அரசு மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சியது. அதனால்தான் தற்போது புகார் அளித்துள்ளோம். மாரிதாசின் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை கொண்டு அவதூறு பரப்பும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களைம் காவல் துறை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

click me!