தலைவனை தரையில் தேடுங்கள்... திரையில் தேடாதீங்க... நாங்குநேரியில் சீமான் தேர்தல் முழுக்கம்!

By Asianet TamilFirst Published Oct 8, 2019, 8:19 AM IST
Highlights

அரசியல் என்பதே பணமயம் ஆகிவிட்டது. பண அரசியலுக்கு எதிராக நிச்சயமாக ஒரு மாற்றம் வரும். மக்கள் தாங்களாகவே முன்வந்து புரட்சி செய்வார்கள். அப்போது அந்த மாற்றம் ஏற்படும்.  

யாரால் தேர்தல் வருகிறதோ அவரிடமிருந்து தேர்தலுக்கான தொகையைத் தேர்தல் ஆணையம் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
2016 சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி தொடர்ச்சியாக நாம்  தமிழர் கட்சி தேர்தலில் களம் கண்டுவருகிறது. வேலூர் தேர்தலைபோலவே நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களை சில கட்சிகள் பல்வேறு காரணங்களைக் காட்டி புறக்கணித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி களம் கண்டுள்ளது. இரு தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு தேர்தல் பிரசாரத்தையும் தீவிரப்படுத்திவருகிறது.
அதிமுக, திமுக. காங்கிரஸ் தரப்பில் தலைவர்கள் இன்னும் பிரசாரத்தில் ஈடுபடாத நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிட்டார். நாங்குநேரியில்  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பல்வேறு இடங்களில் சீமான் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசும்போது, “எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில்தான் நடிகர்களை மக்கள் விரும்புகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். மக்கள் தங்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும். திரையில் தேடக்கூடாது.
தற்போதைய அமைப்பு முறையே சரி இல்லை என்று கூறிவருகிறேன். சிலர் சிஸ்டம் சரி இல்லை என்று பேசுகிறார்கள். அரசியல் என்பதே பணமயம் ஆகிவிட்டது. பண அரசியலுக்கு எதிராக நிச்சயமாக ஒரு மாற்றம் வரும். மக்கள் தாங்களாகவே முன்வந்து புரட்சி செய்வார்கள். அப்போது அந்த மாற்றம் ஏற்படும்.  நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு யார் காரணம்? இப்போது இடைத்தேர்தலை நடத்த அரசுக்கு செலவு. யாரால் தேர்தல் வருகிறதோ அவரிடமிருந்து தேர்தலுக்கான தொகையைத் தேர்தல் ஆணையம் பெற வேண்டும்.” என்று தெரிவித்தார்.

click me!