
புதுச்சேரி , நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அதிமுகவுக்கு திடீர் ஆதரவை தெரிவித்துள்ளது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் கடத்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுடன் நடந்தது. இதில் காங்கிரஸ் திமுக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலின் போது பரமசிவம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றதும் நாராயணசாமி தனது செல்வாக்கால் பாண்டிச்சேரி முதல்வராக ஆனார்.
பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நாராயணசாமி முதல்வர் ஆனதால் 6 மாதத்திற்குள் எம்.எல்.ஏவாக பதவி ஏற்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் நாராயணசாமி போட்டியிட வசதியாக நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நெல்லித்தோப்பு தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. நாராயணசாமிக்காக பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. அவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது.
இந்நிலையில் நெல்லித்தோப்பில் நாராயணசாமியும் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகரும் போட்டியிடுகின்றனர். திமுக நாராயணசாமிக்கு ஆதரவளித்திருக்கின்ற சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பாஜக ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் சுவாமிநாதன் தெரிவித்தார். ஆனால் என்.ஆர். காங்கிரஸ் கட்சி இந்த இடைதேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நெல்லித்தோப்பு சட்டமன்ற இடைதேர்தலில் எங்கள் ஆதரவு அதிமுக வேட்பாளர் ஓம் சக்தி சேகருக்கு என்று தெரிவித்தார்.
இந்த தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது , இது மக்கள் நலனுக்கு எதிரானது , ஆகவே மக்கள் நலன் காக்க அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று ரங்கசாஅமி தெரிவித்தார். அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதிமுகவுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்படும் என தெரிகிறது.