
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நேற்று காலை லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சிகிச்சை அளித்தார். சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்களான சீமா, ஜூடி ஆகியோரும் பிசியோதெரபி மூலம் உடற்பயிற்சி மேற்கொள்ள செய்தனர். இதையொட்டி தற்போது, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஒரிரு நாட்களில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார்.
இதற்கிடையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு நடிகை நமீதா, தமிழகத்தை சேர்ந்த இந்திய கபடி அணி வீரர் தர்மராஜ் சேரலாதன் உள்பட பலர் வந்து சென்றனர்.