செயல்வீரர்கள் கூட்டத்தில் டங்கு ஸ்லிப்பான மு.க.ஸ்டாலின் - அதிர்ச்சியில் திமுக தலைவர்கள்

First Published Nov 2, 2016, 7:18 AM IST
Highlights


திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும் போது காவிரி நடுவர் மன்றம் அமைக்க உச்சநீதிமன்றத்து அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியதாக பேசியது அவர்கள் கட்சித்தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக அரசியல் தலைவர்களில் சாதூர்யமான பேச்சுக்கும் , ஆழமான கருத்துக்கும், யாரையும் பேச்சு வளத்தால் கட்டிப்போடும் திறன் பெற்றவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது பேச்சாற்றல் , எழுத்தாற்றல் , ஆழமான அரசியல் அறிவு, பிரச்சனைகளை அணும்கும் விதம் இவைகள்  யாவையும் அவரது வாரிசுகளுக்கு அமையவில்லை எனபதை திமுகவினரே ஏற்றுகொள்வார்கள். 

திமுகவில் ஒரு தலைவரின் கீழ் அதிகாரம் என்பது 1971 ஆம் ஆண்டுக்கு பின்னர் முழுதுமாக கருணாநிதியின் கைக்கு வந்தது. அப்போது தனக்கு பின்னர் எம்ஜிஆரோ மற்றவர்களோ வருவதை தடுக்கும் விதத்தில் மு.க.முத்துவை திரைத்துறையில் இறக்கினார். மு.க.முத்து நடித்த பூக்காரி , பிள்ளையோ பிள்ளை போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாகின. இதையடுத்து எம்ஜிஅர் மன்றங்கள் கலைக்கப்பட்டு மு.க.முத்து மன்றங்களாக மாற்றப்பட்டது. 

இதனால் கடுப்பான எம்ஜிஆர் பின்னர் திமுகவில் கணக்கு கேட்டு பிரச்சனை ஆகி வெளியேற்றப்பட்டு அதன் பின்னர் அதிமுக உருவானது. ஆனால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மு.க.முத்து ஒன்றுமில்லாமல் போனார். 

அதன் பின்னர் 10 வருடங்கள் அதிமுக எதிர்ப்பிலேயே கழிந்தது. அப்போதும் திமுக சொல்வன்மை, அறிவார்ந்த கருத்துக்களால் ஆளப்பட்டது. அப்போது கருணாநிதிக்கு இணையாக தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கும், அபிமானமும் பெற்றவர் வைகோ. அவரது பேச்சாற்றலால் திமுகவை பட்டிதொட்டியெல்லாம் உயிர்ப்போடு வைத்திருந்தார். 

மாநில அரசியலில் துரைமுருகன் , சுப்பு, ரகுமான்கான் , விடுதலை விரும்பி  போன்றோர் இருந்தாலும் அகில இந்திய அளவில் முரசொலி மாறனுக்கு அடுத்து நாஞ்சில் மனோகரனுக்கு இணையாக டெல்லி அரசியலிலும் வைகோ கோலோச்சினார். ஆனால் இவர்கள் யாருக்கும் இல்லாத சிறப்பு அறிவார்ந்த , ஆவேசமான பேச்சால் தமிழகம் முழுதும் வைகோ பிரபலமாக தொண்டர்களால் நேசிக்கப்பட்டார். 

வைகோ இல்லாத மேடையே இல்லை எனலாம். அந்த நேரத்தில் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணிக்கு தலைமை தாங்கினாலும் தொண்டர்கள் வைகோவை அடுத்த தலைவராக பார்த்தனர். கருணாநிதியின் அறிவார்ந்த அரசியல் வாரிசாக அவரை இனம் கண்டனர்.

இந்த நேரத்தில் திமுகவுக்கு சிக்கலான இலங்கை பிரச்சனைஅயில் நீக்கு போக்காக நடக்க வைகோ தயாராக இல்லாததால் முதல் முறையாக உளவுத்துறை அறிக்கையை காரணம் காட்டி வைகோவை நீக்கப்பட்டார். அந்த நேரம் மு.க.ஸ்டாலின் கட்சியில் காலூன்றவே இந்த ஏற்பாடு என விமர்சனம் வைக்கப்பட்டது. அதை உண்மை என நிருபிக்கும் வகையில்  பல சம்பவங்கள் திமுகவில் அதன் பிறகு நடந்துள்ளது. 

மு.க.ஸ்டாலின் மெல்ல மெல்ல தனது நிலையை வலுப்படுத்தி கொண்டு தற்போது திமுகவின் தவிர்க்க இயலாத சக்தியாகி விட்டார். கட்சியை தனது கட்டுப்படிலும் கொண்டுவந்து விட்டார். கட்சியில் 1968 முதல் நீண்ட அனுபவம் கொண்டவர் , இவரது அரசியல் அனுபவம் கனிமொழியின் வயது என்று சொல்லலாம் . கட்சியில் தனக்கென இடத்தை பெற்ற மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் துணை முதல்வராக அனுபவம் பெற்றவர். 

 ஆனாலும் பல நேரங்களில் ஆழ்ந்த பிரச்சனை உள்ள கருத்துகளில் மு.க.ஸ்டாலின் தடுமாறுகிறார் என்ற விமர்சனம் உண்டு. சமீபத்தில் சட்டமன்றத்தில் கூட முதலமைச்சர்  ஜெயலலிதா , இலங்கை பிரச்சனை , கச்சத்தீவு பிரச்சனை போன்றவற்றில் திமுக நிலைபாடு குறித்து வைத்த விமர்சனங்களுக்கு ஸ்டாலின்  உரிய பதிலளிக்க முடியாமல் திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்த சந்தர்ப்பங்கள் உண்டு.  

இந்நிலையில்  கடந்த   அக் 30 ஆம் தேதி மாலை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின்   நடுவர் மன்றத்தை அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கே அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கூறுகிறதே? என்று பேசினார். இதை கேட்ட மேடையில் இருந்த தலைவர்கள் அதிர்ந்து போயினர் . 

ஆனால்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத்தான்  உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வழக்குரைஞர் முகுல் ரோகத்கி கூறினார். நடுவர் மன்றம் என்று அவர் சொல்லவில்லை, ஏனென்றால், 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா, காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டதால்தான் மத்திய அரசு நடுவர் மன்றமே அமைத்தது.

இந்த மேலாண்மை வாரியத்துக்கும் , நடுவர் மன்றத்திற்கும்  வித்யாசம் தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறாரே எப்படி சொல்வது என்று தடுமாற்றத்துடன் பார்த்தப்படி இருந்துள்ளனர். தற்போது இந்த மேடைப்பேச்சு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இடையே விமர்சிக்கப்படுகிறது

click me!