புதுச்சேரியில் பாஜகவின் இரைதான் என்ஆர்.காங்கிரஸ்.. தமிழகத்தில் முறுக்கப்பட்ட அதிமுக.. சிபிஎம் சரமாரி அட்டாக்!

By Asianet TamilFirst Published Aug 14, 2021, 9:22 PM IST
Highlights

புதுச்சேரியில் பாஜக காலூன்றவே என்.ஆர்.காங்கிரஸை பயன்படுத்துகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனியட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்கள்.
 

புதுச்சேரியில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மதசார்ப்பின்மையின் மீது தாக்குதல் நடக்கிறது. ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகிறது. கூட்டாட்சிக்கு பதில் ஒற்றை ஆட்சி என்பதை மோடி முயற்சி செய்கிறார். பெகாசஸ் மென்பொருள் மூலம் ஆயிரம் பேருடைய தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரின. ஆனால், மத்திய அரசு ஏற்கவில்லை. இதைக் கண்டித்து செப்டம்பர் முழுவதும் நாடு முழுவதும் கண்டன இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளோம்.


புதுச்சேரியில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, பாஜக அல்லாத மாநில அரசுகளை கவிழ்க்கிறது அல்லது சீர்குலைக்கிறது. ஒருவேளை பாஜகவை ஆதரிக்கக் கூடிய மாநில அரசாக இருந்தால், அவர்களுடைய கையை முறுக்கி அவர்களுக்கு சாதகமாக செயல்பட வைக்கிறது. அப்படிதான் தமிழகத்திலும் செய்தார்கள். புதுச்சேரியில் ஆளுநரை பயன்படுத்தி முதலில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தார்கள். யூனியன் பிரதேச வரலாற்றிலேயே எக்கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, அந்தக் கட்சிதான் நியமன எம்எல்ஏக்களை பரிந்துரைப்பார்கள். ஆனால், பாஜகவை சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமனம் செய்துள்ளார்கள்.
புதுச்சேரியில் பாஜக காலூன்றவே என்.ஆர்.காங்கிரஸை பயன்படுத்துகிறார்கள். நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் இந்துத்துவா கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும். அதற்காகத்தான் இந்த அணுகுமுறையை பாஜக அரசு கடைபிடிக்கிறது. அதற்கு என்.ஆர். காங்கிரஸ் இரையாவது போல் உள்ளது.” என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

click me!