இனி சட்டப்பேரவையில் பாரத் மாதாகி ஜெய், வந்தேமாதம், ஜெய்ஹிந்த் கோஷம் எழுப்புவோம்.. எல்.முருகன் அதிரடி..!

By Asianet TamilFirst Published Jun 28, 2021, 8:36 PM IST
Highlights

ஜெய்ஹிந்த் கோஷத்தை இழிவுபடுத்திய, திமுக எம்எல்ஏ சார்பில்  முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வருகிற காலங்களில் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள், பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற முழக்கங்களைத் தொடர்ந்து எழுப்புவார்கள் எனத் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் உரையைப் படித்தவுடனேயே தமிழகம் தலை நிமிர்ந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் சென்ற ஆளுநர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே நன்றி வணக்கம், ஜெய்ஹிந்த் போட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆளுநர் உரையிலே அந்த ஜெய்ஹிந்த் இல்லை என்பதை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன் என்று திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ சட்டப்பேரவையில் பேசி ‘ஜெய்ஹிந்த்’ என்ற தேச உணர்வு மந்திரத்தை இழிவுபடுத்தியுள்ளார்.
அதாவது ஜெய்ஹிந்த் என்று குறிப்பிடாததால் தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டது என்று கூறிக் கொண்டாடி உள்ளனர். திமுக எம்எல்ஏ, ஜெய்ஹிந்த் கோஷத்தை இழிவுபடுத்தியதை, அப்போது அவையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் உள்ளம் மகிழ்ந்துள்ளார். திமுக எம்எல்ஏவின் இந்தச் செயலை ஒப்புக்குக்கூட இதுவரை கண்டிக்கவில்லை. ஆனால், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கொந்தளித்துப் போய் உள்ளார்கள். பிரிவினையைத் தூண்டும் வகையில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று பேசத் தொடங்கினார்கள். இதன் மூலம் பிரிவினைவாத, தேசதுரோக, தனித் தமிழ்நாடு, திராவிட நாடு போன்ற உளுத்துப்போன சித்தாந்தத்திற்குப் புத்துயிர் கொடுக்க முயல்கின்றனர். அந்த வரிசையில் இப்போது ஜெய்ஹிந்த் இழிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜெய்ஹிந்த் என்ற மாபெரும் மந்திரச் சொல்லை இந்தியாவுக்கு வழங்கியது ஒரு தமிழன். செண்பகராமன் பிள்ளை என்ற பச்சைத் தமிழன்தான் முதன்முதலில் ஜெய்ஹிந்த் என்ற உணர்ச்சிப் பிழம்பு கோஷத்தை உச்சரித்தார். அந்த கோஷத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் எழுப்பி அது இந்திய தேசிய ராணுவத்தின் கோஷமாக்கப்பட்டது. அதன் பிறகு சுதந்திரப் போராட்டத்தில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உச்சரிக்காத வீரர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையைக் கேட்டால் வெள்ளையர்கள் பதறினார்கள். ஆனால், இப்போது ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையைக் கேட்டால், கொள்ளையர்களும், தேசத்துரோகிகளும், பிரிவினைவாத சக்திகளும் பதறுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மந்திரச் சொல். ஜெய்ஹிந்த் ஒவ்வொரு ராணுவ வீரனின் ரத்தத்திலும் ஊறிப்போன கோஷம் ஜெய்ஹிந்த். இந்த தேசத்தை தெய்வமாக நேசிக்கிற ஒவ்வொரு தேசபக்தனின் ஆன்மாவிலும் உறைந்துபோன கோஷம் ஜெய்ஹிந்த். அப்படிப்பட்ட புனிதமான மந்திரச் சொல்லை இழிவுபடுத்தியது மட்டுமல்லாமல், திமுக எம்எல்ஏ அதனை நியாயப்படுத்தியும் வருகிறார்.
அப்பழுக்கற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்துபவர்களுக்குத் துணை போவது என்பது திமுகவிற்குப் புதிது அல்ல. கடந்த 17-ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர், வாஞ்சிநாதனின் தியாகத் திருநாள் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் முதல்வரோ, அல்லது ஏதாவது ஒரு அமைச்சரோ அவரின் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை. அவரது உருவப் படத்திற்கு கூட முதல்வர் ஸ்டாலினோ அல்லது திமுக அமைச்சர்களோ மலர் தூவி மரியாதை செலுத்த முன்வரவில்லை. ஆனால், வாஞ்சிநாதனை இழிவுபடுத்திய தேசத்துரோக கும்பல்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. திராவிட தமிழர் கட்சி, ஆதி தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனை இழிவுபடுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு திமுக ஆதரவு அளித்து வருகிறது.
ஜெய்ஹிந்த் கோஷத்தை இழிவுபடுத்திய, திமுக எம்எல்ஏ சார்பில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், பகிரங்கமாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வருகிற காலங்களில் தமிழக சட்டப்பேரவையில், பாஜக எம்எல்ஏக்கள், பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற முழக்கங்களைத் தொடர்ந்து எழுப்புவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிக்கையில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 

click me!