நீட் தேர்வு குழுவை ரத்து செய்யுங்கள்... தமிழக அரசுக்கு எதிராக பாஜக உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

By vinoth kumarFirst Published Jun 28, 2021, 7:23 PM IST
Highlights

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை எதிர்த்து பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை எதிர்த்து பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

நீட் தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவானது பொதுமக்களிடம் கருத்து பெற்று முடித்து, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், ஏ.கே.ராஜன் குழுவைக் கலைக்க வேண்டுமென தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். 

ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

click me!