இனி திமுகவுக்கும்-பாஜகவுக்கும்தான் போட்டி... சீன்லயே இல்ல அதிமுக.. அதிரடி கிளப்பிய வி.பி துரைசாமி.

By Ezhilarasan BabuFirst Published Mar 13, 2021, 2:22 PM IST
Highlights

இனி தமிழகத்தில் பாஜகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்றும், பாஜக திமுகவிற்கு ஆரோக்கியமான போட்டி இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் விலகியதால் பாஜக கூட்டணிக்கு எந்த ஒரு பின்னடைவும் இல்லை என தெரிவித்தார்.

இனி தமிழகத்தில் பாஜகவிற்கும் திமுகவிற்கும் தான் நேரடி போட்டி என பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில்,நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக மக்களிடம் கருத்து கேட்பதற்கு உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை என்ற பெயரில், ஒவ்வொரு கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் வார்டு வாரியாக மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கோரிக்கைகளை அவர்களிடமிருந்து பெற்று அதனை தேர்தல் அறிக்கையில் வெளியிட உள்ளனர். இதனை பாஜக மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி, சக்கரவர்த்தி, பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் வி. பி துரைசாமி, உங்கள் அறிக்கை எங்கள் விருப்பம் என்ற திட்டத்தின் மூலம் மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் கோரிக்கைகளை பெற்று அதனைத் பாஜக தேர்தல் அறிக்கையில் வெளியிட உள்ளோம் என தெரிவித்தார். மேலும் நெல்லையில் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தது குறித்த கேள்விக்கு,"நயினார் நாகேந்திரன் ஜோதிடத்தில் நம்பிக்கை உடையவர். அதனால் அவர் நேற்றே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். 

இது பற்றி மாநில தலைவர் எல்.முருகன் நேற்றே கூறிவிட்டார். ஓரளவிற்குஅவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை அவருக்கு இருப்பதால் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்" இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் இனி தமிழகத்தில் பாஜகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்றும், பாஜக திமுகவிற்கு ஆரோக்கியமான போட்டி இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் விலகியதால் பாஜக கூட்டணிக்கு எந்த ஒரு பின்னடைவும் இல்லை என தெரிவித்தார்.
 

click me!