
சென்னை - மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சூட்டியிருக்கிறார்.
நெடுஞ்சாலைத்துறையின் பவள விழாசென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பவளவிழா மலரை வெளியிட்டு பேசினார். “மக்களிடம் பாராட்டைப் பெற வேண்டுமென்றால், அழகான, தரமான, சரியான சாலைகள் அமைத்தாலே போதும். அப்படிச் செய்தாலே முழுமையான நல்ல பெயரை நாம் வாங்கிட முடியும். ரோடு சரியில்லை என்றால் முதலில் மக்கள் திட்டுவது அரசைதான். அதே நேரத்தில் சாலை தரமாக இருந்தால், ‘பளிங்கு மாதிரி இருக்கே...’ என்று அரசைத்தான் மக்கள் பாராட்டுவார்கள். எனவே அரசுக்கு நல்லப்பெயரை பெற்றுத்தரவும் அவப்பெயரை பெற்றுத்தரவும் நெடுஞ்சாலைத்துறை காரணமாக அமைந்திட முடியும்.
சாலை போடுவதில் பெரிய சிக்கலே, அதற்கான நிலங்களை கையகப்படுத்துவதுதான். நில எடுப்பு பணிகள் தாமதமாக நடப்பதால் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வர தாமதமாகிறது என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் 5 சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் கொண்ட 184 பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இனி நிலம் கையக்கப்படுத்துவதில் தாமதம் ஏற்படாது என்று நம்புகிறேன். என்னை மிகவும் வருத்தமடைய செய்யும் செய்தி என்றால், புள்ளிவிவரங்களின்படி சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழகம் என்பதுதான். அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாகத்தான் சாலை விபத்தில் சிக்குவோரின் முதல் 48 மணி நேர அவசர சிகிச்சை செலவை தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். விபத்தில் சிக்கியோரை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை, விபத்தில் சிக்கும் வெளிமாநிலத்தவருக்கும் திட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்துகள் அதிகம் நடக்கும் 556 இடங்களில் வேகத்தடை, சூரிய ஒளி பிரதிபலிப்பான்கள், தற்காலிக தடுப்பான்கள், எச்சரிக்கை குறியீடுகள் அமைக்கப்பட்டன. இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரியில் சாலை விபத்துகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
நெடுஞ்சாலைத் துறைக்கு கிடைக்கும் பெருமைகளுக்கு கருணாநிதிதான் காரணம். அதை மனதில் வைத்து ஒரு புதிய அறிவிப்பை இங்கே வெளியிடுகிறேன். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை’ என பெயர் சூட்டப்படும்.” என்று ஸ்டாலின் பேசினார்.