காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வன்முறை சம்பவங்களை ஏற்படுத்திய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் விளக்கம் அளிக்க ஒழங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் அலுவலகத்தில் மோதல்
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த பிரச்சனைக்கு காரணமான சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து திரு.கே.எஸ்.அழகிரி அவர்களின் கடுமையான உழைப்பினால் உருவாக்கப்பட்ட கட்சியின் நற்பெயருக்கு களங்கமும் இழிவும் ஏற்பட்டிருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் நற்பெயர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பாதிப்பிலிருந்து காங்கிரஸ் கட்சியை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமானதல்ல.
ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை
மூன்று வட்டாரங்களில் ஒரு வட்டார தலைவர்தான் தமக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வட்டாரங்கள் வழங்கப்படவில்லை என்ற காரணத்தை கூறி இத்தகைய வன்முறையை ரூபி மனோகரன் நிகழ்த்தியது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தீர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பான பதவியில் இருக்கும் ரூபி மனோகரன் அவர்கள் அதற்குரிய பொறுப்பில் இருக்கும் தலைவர்களிடம் உரியமுறையில் பேசியிருந்தால், இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், அத்தகைய அணுகுமுறையை தவிர்த்துவிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய அநாகரிக செயல்கள் நடத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு.ரூபி ஆர்.மனோகரன் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு பரிந்துரை செய்யும்படி திரு.கே.ஆர்.ராமசாமி அவர்களின் தலைமையிலான ஒழங்கு நடவடிக்கைக் குழுவை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களான கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் இத்தீர்மானத்தின் மூலம் ஏகமனதாக கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் போராட்டம்
இதனையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நடைபெறவுள்ள 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தப்பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் கடந்த நவம்பர் 15, 16 ஆகிய இரு தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. முதல் நாள் கூட்டம் நடைபெறுகிறபோது நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 6 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு முன்பாக முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு தினேஷ் குண்டுராவ் மற்றும் முக்கிய தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் வருவதை தடுத்து, முற்றுகை போராட்டம் நடத்தினர்.
விளக்கம் அளிக்க உத்தரவு
இதை தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவிதங்களுக்கு தாங்கள் தான் காரணம் என்று கூறி 62 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு தினேஷ் குண்டுராவ் அவர்களும் கேட்டுக்கொண்டுள்ளார்.எனவே, வருகிற நவம்பர் 24 ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தாங்கள் நேரில் ஆஜராகி நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்