விவசாயிகளுக்கான அரசு என வாய்கிழிய பேசும் இபிஎஸ்.. விளம்பரத்திற்காக இப்படி பேசுவீங்களா.. செல்வப்பெருந்தகை..!

By vinoth kumar  |  First Published Nov 17, 2022, 11:58 AM IST

இன்று ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசு கொடுத்த இழப்பீடு எவ்வளவு?


ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசு கொடுத்த இழப்பீடு எவ்வளவு? என காங்கிரஸ் கட்சிஎம்எல்ஏ செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். 

122 ஆண்டுகளுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பொழிந்து சீரழிவை ஏற்படுத்தியது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்கள் ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், நேற்று மயிலாடுதுறையில் ஆய்வு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு நிவாரண நிதியாக ஏக்கருக்கு 30,000 கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சிஎம்எல்ஏ செல்வப்பெருந்தகை எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 2020 டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், கடலூரில் 1.5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. கடலூரில் நெல் மட்டுமல்லாது வாழை, பொங்கல் கரும்பு, நிலக்கடலை, பருத்தி, காய்க்கறிப்பயிர்கள் போன்றவை ஆயிரக்கணக்கான ஏக்கரில் சேதமடைந்தன. 

இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி தஞ்சாவூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைபயிர்கள் சேதமடைந்தன. மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டங்களை அப்போதைய முதல்வாரன எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், வேளாண்மை துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய டிசம்பர் 28, 2020 அன்று தமிழகம் வந்த மத்தியக் குழுவின் அறிவுரைப்படி, புள்ளி விவரங்கள் இறுதி செய்யப்பட்டு, பாதிப்படைந்த விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விவரங்களும் சரிபார்க்கப்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று கூறினார்.

இன்று ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசு கொடுத்த இழப்பீடு எவ்வளவு? குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் கொடுத்தார்களா? அதிமுக ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, திமுக ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சா? எதிர்கட்சியாக இருந்தாலும் நியாயமாக பேசவேண்டும் அல்லவா? அரசியல் செய்ய வேண்டுமென்ற விளம்பர நோக்கத்திற்காக இப்படியெல்லாம் முன்னாள் முதல்வர் பேசுவதா?

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் தகுந்த இழப்பீட்டை இந்த தமிழக அரசு வழங்கும் என்று எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவான அரசு அம்மா அரசுதான் என்று மார்தட்டி சொல்லிக் கொள்ளும் அதிமுக, அவர்கள் கூட்டணியில் உள்ள ஒன்றிய அரசிடம் பேசி விவசாயிகளுக்கு தேவையான நிவாரண நிதியை கேட்டுப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என செல்வபெருந்தகை கூறியுள்ளார். 

click me!