6 மாசமா கோணியை தலையில் போட்டுக்கிட்டு கோயில் கோயிலா தங்கம் அள்ள போனிங்க.. ஸ்டாலினை வம்பிழுத்த எச்.ராஜா.

By Ezhilarasan BabuFirst Published Nov 15, 2021, 11:47 AM IST
Highlights

கடந்த 6 மாதத்தில் இந்த திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலினும், அமைச்சல் சேகர்பாபுவும்  கோணி சாக்கை தூக்கி தலையில் போட்டுக்கொண்டு கோவில் கோவிலாக தங்கம் எடுக்க போனார்கள். 

திமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது ஆனால் வெள்ளம்பாதிப்பை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாறாக கடந்த 6 மாதத்தில் கோணி சாக்கை தலையில் போட்டுக்கொண்டு முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் சேகர்பாபு கோயில் கோயிலாக தங்கம் அள்ள போனார்கள் என பாஜக எச். ராஜா விமர்சித்துள்ளார். அதிமுக திமுக மாறி மாறி ஆட்சியில் இருந்தும் மழை நீர் வடிகால் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன, ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே திமுகவுக்கும்-பாஜகவுக்கும் இடையேயான கருத்து மோதல் தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது திமுக ஆட்சி அமைத்தது முதல் அதன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பாஜக கடுமையாக எதிர்த்தும் விமரிசித்தும் வருகிறது. தமிழகத்தின் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும் மக்கள் மன்றத்தில் ரியல் எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் அண்ணாமலை தொடங்கி  எச். ராஜா வரை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்து சமய அறநிலைய துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை, கோவில் நகைகளை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் திமுக அரசு இறங்கியுள்ளது. ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும், கோவில் நகைகளை உருக்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாத திமுகவுக்கு கோவில் விவகாரங்களில் தலையிட என்ன உரிமை இருக்கிறது என்றும் சித்தாந்த ரீதியாக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பெருவெள்ளம் பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்னை வெள்ள விவகாரத்தை  அரசியல் விவாதமாகவே மாற்றியுள்ளனர். கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை படகில் சென்று பார்வையிட்டதுடன்,  முதல்வர் ஸ்டாலின் இரண்டு முறை கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் கொளத்தூர் தொகுதி குளமாக காட்சியளிக்கிறது என கடுமையாக விமர்சித்த்துடன், சென்னையை கோட்டையாக வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள் ஆனால் சென்னை ஓட்டையாக இருக்கிறது என்று அவர் கூறி திமுக அரசை கடுமையாக தாக்கினார். மழைக்காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல் அதை வைத்து அரசியல் செய்வது இழிவான செயல் என திமுக தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு எதிராக விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில் பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா இதே விவகாரத்தில் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்,

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது, வெள்ளம் புதியதாக வரவில்லை, 2011 க்கு முன்னர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னையில் நிரந்தர மழைநீர் வடிகால் பணிக்காக 633 கோடி ரூபாயை ஒதுக்கினார். ஆனால் அதற்கு பிறகும் 2015 பெரிய அளவில் வெள்ளம் வந்தது. அதன்பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்து பல பணிகள் செய்யப்பட்டது, இப்போதும் வெள்ளம் வந்திருக்கிறது. நான் கடந்த 7ஆம் தேதி சென்னையில் இருந்தேன், அதிகாலை ஒரு மணி நேரம்தான் மழை பெய்தது, மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து வடபழனியில் உள்ள எனது வீட்டிற்கு செல்ல ஒரு மணி நேரம் ஆனது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நான் பெங்களூர் சென்றிருந்தேன், அங்கு மழை பெய்து அரைமணி நேரத்தில் மழை பெய்ததற்கான சுவடே இல்லை, சென்னையில் இருக்கின்ற ஏரிகள் எல்லாம் வீடுகளாகியுள்ளது. அதுவும் 67 ல் இருந்து திரவிடியன் ஸ்டார்க் ஆட்சிக்கு வந்தது முதல், தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஒழுக்கம் வேண்டாம், பொதுவாழ்க்கைக்கும் ஒழுக்கம் வேண்டாம் என்ற எண்ணம், தமிழ் மக்கள் மனதில் வளர்ந்துவிட்டது.

ஏரிகள் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் ஆகிவிட்டன. வள்ளுவர்கோட்டம் இருப்பதே ஏரியில்தான், அதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்ததால் வெள்ளம் வருகிறது. பாம்பேயிலும் மழை பெய்கிறது 2 மணி நேரம் 3 மணி நேரத்திற்குள் மழை வடிகிறது. திமுக ஆட்சிக்கு வந்த இந்த 6 மாதத்தில் தமிழ்நாட்டில் வடிகால் கட்டமைப்பை சரி செய்திருக்கலாம் அல்லவா, 1964  ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இடையில் மாறி மாறி வருகிறார்கள், ஆனால் பிரச்சினை ஓயவில்லை, கடந்த ஆறு மாதத்தில் மூன்று வேலைகள் மட்டும்தான் ஒழுங்காக நடக்கிறது, தடுப்பூசி 100% இலவசமாக கொடுத்து அதை மத்திய அரசு கண்காணிக்கிறது அதனால் அது சரியாக நடக்கிறது. அதேபோல் ரேஷன் கடைகளில் 5 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு நாடு முழுவதும் 80 கோடிக்கு மக்களுக்கு வழங்கப்படுகிறது அது தமிழகத்தில் சரியாக நடக்கினது. மூன்றாவதாக விவசாயிகளுக்கு 10வது முறையாக அவர்களின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் சேர்ந்துள்ளது. இதைத்தவிர வேறெதுவும் நடைபெறவில்லை.

கடந்த 6 மாதத்தில் இந்த திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலினும், அமைச்சல் சேகர்பாபுவும்  கோணி சாக்கை தூக்கி தலையில் போட்டுக்கொண்டு கோவில் கோவிலாக தங்கம் எடுக்க போனார்கள். வேறு எதுவும் நடக்கவில்லை. எப்படியாவது  கோவிலில் இருப்பதையெல்லாம் எடுத்து விட வேண்டும் என கஜினி முகமது போல சென்றார்கள், அதையும் நீதிமன்றம் சட்டவிரோதமான நிறுத்தி வைத்திருக்கிறது. தயவுசெய்து நிர்வாகத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

 

click me!