
எதிர்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்க்க வேண்டும் என்றால் மாநிலம் தோறும் பா.ஜ.க.விற்கு எதிராக பலமான கூட்டணி அவசியம் என்று காங்கிரஸ் கருதுகிறது. மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா என மூன்று மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. பலவீனமாக உள்ளது.
மற்றபடி காஷ்மீரில் கூட ஜம்மு பகுதியில் பா.ஜ.க பலம் வாய்ந்ததாக உள்ளது. பா.ஜ.க.வை பலவீனப்படுத்த வேண்டும் என்றால் மாநிலம் தோறும் பிராந்தியக்கட்சிகளை கூட்டணியில் சேர்த்து வலுவான ஒரு கூட்டணியை தேசிய அளவில் உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் எதிர்பார்க்கிறது.
மேலும் மோடிக்கு எதிராக வலுவான தலைவர் ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதும் அவசியம் என்று அக்கட்சி நினைக்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக்கலாம் என்றால் அதற்கு சரத்பவாரின் கட்சி, மம்தாவின் கட்சி மட்டும் அல்ல அனைத்து பிராந்திய கட்சிகளும் தயங்குகின்றன.
ஏன் தி.மு.க. கூட தேர்தல் நேரத்தில் தான் பிரதமர் வேட்பாளர் குறித்து யோசிக்க முடியும் என்று கூறிவிட்டது. இதற்கு காரணம் கடந்த காலங்களில் ராகுல் தலைமையில் அந்த கட்சி அடைந்த படுதோல்விகள் தான். தற்போது ராகுல் முன்பை விட அரசியலில் பக்குவப்பட்டுவிட்டாலும் கூட மோடியை போன்று மேலும் ஒரு தலைவரை தேசிய அளவில் உருவாக்கிவிடக்கூடாது என்றும் மாயாவதி, அகிலேஷ் போன்றோர் கருதுகின்றனர்.
எனவே மாநில அளவில் அதிக செல்வாக்குடன் இருக்கும் மம்தா பானர்ஜி, சரத்பவார், மம்தா போன்றோரில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக மோடிக்கு முன்பு நிறுத்த எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர். இவர்களின் பெரும்பாலானவர்கள் மம்தாவையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த விரும்புகின்றனர்.
காங்கிரசும் கூட மேற்கு வங்கத்தில் கணிசமான தொகுதிகளை திரிணாமுல் ஒதுக்கினால் மம்தாவை பிரதமர் வேட்பாளராக ஏற்க தயாராகவே உள்ளது. இந்த நிலையில் டெல்லி வந்த மம்தாவிடம் எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளரகா களம் இறங்குவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அது தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று மம்தா பதில் அளித்தார். மம்தா பானர்ஜி பின்வாங்கியிருப்பதால் ராகுலை பிரதமர் வேட்பாளராக்கும் வாய்ப்பு அதிகமாகும் என காங்கிரஸ் கருதுகிறது.