
தமிழகத்தில் சட்டமன்றம் என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அதில் ஜனநாயகம் இருக்கிறதா? ஜனநாயக முறையில் கருத்துகளை எடுத்துச்சொல்ல முடிகிறதா என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரின் பொதுவாழ்வு பொன்விழா மற்றும் 40 ஆண்டுகால சட்டமன்ற-பாராளுமன்ற பணிகள் பாராட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சு.திருநாவுக்கரசர் பொன்விழா மலரை வெளியிட அதனை புதுச்சேரி முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் , திராவிடத்தில் தொடங்கி தேசிய நீரோட்டத்தில் கலந்திருப்பவர் சு.திருநாவுக்கரசர் என்றார். தனிக்கட்சி தொடங்கி அதிலும் அனுபவம் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் பணியாற்றி நன்மதிப்பை பெற்றிருக்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் இணைந்து பணியாற்றி அவரிடமும் நன்மதிப்பை பெற்றார் என பாராட்டிப் பேசினார்.
தமிழகத்தில் இன்றைக்கு சட்டமன்றம் இருக்கிறது ஆனால் அதில் ஜனநாயகம் இருக்கிறதா? ஜனநாயக முறையில் கருத்துகளை எடுத்துச்சொல்ல முடிகிறதா என கேள்வி எழுப்பினார்.
சட்டமன்றத்தில் கேள்வியும் கேட்க முடியல…அப்படி கேட்டால் பதிலும் கிடைப்பதில்லை என்றும் ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.
மேலும் திருநாவுக்கரசர் பொன்விழாவில் மதவாத சக்திகளை முறியடிக்கும் உறுதியினை ஏற்போம், சபதம் ஏற்போம் என்றும் ஸ்டாலின் கூறினார்..