விஷாலுக்கு சப்போர்ட் பண்ணி... வாங்கிக் கட்டிக்கிட்டவங்க ... முதல் நபர் இவர்தான்! 

First Published Dec 6, 2017, 3:37 PM IST
Highlights
nose cut for kushboo and others who supported vishal in rk nagar by election


நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறி, வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்ததுமே, சினிமா உலகைச் சேர்ந்த சிலரும், அரசியல் தளத்திலும் ஆதரவு தெரிவித்தும் எதிர்த்தும் கருத்துகள் கூறப்பட்டன.

இவர்களில் அதிகம் ஊடகங்களில் வாய் கொடுத்தவர் இயக்குனர் அமீர்தான்! விஷாலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர் சேரன், பாராட்டு சொன்ன நடிகை குஷ்பு என இந்தப் பட்டியல் நீண்டாலும், அவர்கள் எல்லோருமே சினிமாத்துறையில் மட்டுமே இருப்பவர்கள்.

ஆனால், அரசியல் கட்சியில் பொறுப்பில் இருக்கும் நடிகை குஷ்பு, தன் திரையுலக பாசத்துடன், விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து, எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அது மட்டுமல்ல, அக்கட்சியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். 

குஷ்புவின் திடீர் வாழ்த்தால், காங்கிரஸில் கடும் குழப்பமே ஏற்பட்டது.  திமுக., சார்பில் போட்டியிடும் மருது கணேஷுக்கு காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை உத்தேசித்து ஆதரவு அளித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்து கொண்டு, விஷால் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்தால், கட்சியினர் சும்மா இருப்பார்களா?

'விஷால், அரசியலில் இறங்கியிருப்பதற்கு என் வாழ்த்துகள். அவர் தைரியமாக அரசியலில் இறங்கியதை பாராட்டுகிறேன்' என குஷ்பு கூறியிருந்தார். இதை தைரியமாக குஷ்பு கூறியதற்கு உடனே காங்கிரஸ் கட்சி பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

உடனே, கட்சியின் சார்பில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில்,  அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவிக்கேற்ப, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தையும், கலகத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.  

சுயேச்சை வேட்பாளர் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார். திமுக., வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது எனத் தெரிவிக்க வேண்டிய குஷ்பு 'வாழ்த்து வேறு, ஆதரவு வேறு' என சப்பைக்கட்டு கட்டுகிறார்.. என்று குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். 

இப்போது விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப் பட்டுவிட்ட நிலையில், தேவையில்லாமல் ஒரு பரபரப்புக்காக விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார் குஷ்பு.  அது போல், இயக்குனர் சேரன், கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதும், பரபரப்பு பேட்டி கொடுத்ததும், அமீர் ஆவேசமாகத் திரண்டதும், டி.ராஜேந்தர் அடுக்கு மொழியில் வசனம் பேசியதும் என, இந்த ஒரு முடிவால் எத்தனை குழப்பங்கள்!

விஷால் தடாலடியாக எவர் பேச்சையோ கேட்டு இறங்கியிருக்காமல், தகுந்த முன்னேற்பாடுகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்களுடன் இறங்கியிருந்தால்... அதுவும் சுயேச்சையாக இல்லாமல் அரசியல் கட்சியின் பின்புலத்துடன் இறங்கியிருந்தால் இந்த மூக்குடைப்பு விஷாலுக்கு இல்லாமல் போயிருக்கும்!

click me!