
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கும், ஜனாதிபதி கோவிந்துக்கும் நடிகர் விஷால் புகார் செய்து டிவிட்டரில் விளையாட்டு காட்டியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனு மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. அப்போது விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் கோபமடைந்த விஷால், தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலகத்தின் முன்னே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீஸார் சமாதானப் படுத்தி அவரை தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமியிடம் அழைத்துச் சென்றனர். அப்போது அவர், தன்னை முன்மொழிந்த நபர்கள் அதிமுகவினரால் மிரட்டப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது என்று கூறி ஒரு ஆடியோவை அளித்தார். மேலும், மிரட்டலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோவையும் விஷால் ஊடகங்களிடம் வெளியிட்டார். இதை அடுத்து அவரது முறையீட்டை பரிசீலிப்பதாகக் கூறினார் தேர்தல் அதிகாரி. இதனையும் வீடியோ எடுத்து வைத்தாராம் விஷால்.
இதனிடையே திடீரென அவரது மனு ஏற்கப் பட்டதாகக் கூறப்பட்டதால், நீதி வென்றது, தர்மம் ஜெயித்தது என்றெல்லாம் பேட்டி அளித்த விஷால், பின்னர் அவரது மனு நிராகரிக்கப் பட்டு விட்டதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் கோபமடைந்தார்.
இதை அடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடக் கூடாது என முன்னதாகவே முடிவு செய்துவிட்டு வேட்பு மனு நிராகரிப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியதுடன், இந்தத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் இளைஞர் ஒருவரை வெற்றி பெற வைப்பேன் என சவால் விடுத்தார்.
முன்னதாக, தனது வேட்பு மனு நிராகரிக்கப் பட்டதற்கு பாஜக., பின்னணியில் இருக்கிறது, ஆளும் அதிமுக., இருக்கிறது என்றெல்லாம் புலம்பித் தள்ளிய விஷால், இறுதியாக இப்போது பிரதமர் மோடியிடமே முறையிட முடிவு செய்து டிவிட் செய்துள்ளார். டிவிட்டரில் குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமரின் டிவிட்டர் கணக்கை டேக் செய்து நடிகர் விஷால் குமுறியுள்ளார்.
நான் விஷால். சென்னை ஆர்கே நகர் தேர்தல் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும் என்றே நம்புகிறேன். என் வேட்புமனுவை முதலில் ஏற்றார்கள், பின்னர் நிராகரித்தார்கள். இது முற்றிலும் மோசமானது. இதை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்... என்று அந்த டிவிட்டில் கூறியிருந்தார்.