
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளதோ இல்லையோ... இப்போது கடும் கேலிக்கூத்து ஆகியுள்ளது. ஜனநாயகம் என்ற போர்வையில் என்னவெல்லாம் கேலிக்கு உள்ளாகுமோ என்று மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இந்தத் தேர்தலைப் பார்த்து வருகின்றனர்.
தான் முன்னர் போட்டியிட்ட போது, தனக்கு ஒதுக்கப் பட்ட தொப்பி சின்னமே தனக்கு மீண்டும் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி நிற்கிறார் தினகரன். அப்போது அவருக்கு தேர்தல் ஆணையமே அப்படி ஒரு சின்னத்தை ஒதுக்கியது. காரணம், அந்த நேரத்தில், அதிமுக., என்ற கட்சியுடன் இரு அணிகளாகப் பிரிந்து தேர்தலை சந்தித்தபோது, தேர்தல் ஆணையமே இதனை ஒதுக்கியது.
ஆனால் இப்போது அதே சின்னத்தை வலியுறுத்திக் கேட்கிறார் தினகரன். காரணம் என்ன என்பது தொகுதியில் உள்ள பலருக்கும் நன்கு தெரிந்ததுதானாம். தொகுதியில் வாக்காளர்களுக்கு வரம்பு மீறிய வகையில் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி, பணம் கொடுத்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டு, அது உண்மை என்றும் நிரூபிக்கப் பட்டது. அப்போது, தொப்பியுடன் வாக்காளர்களுக்கு பணமும் விநியோகிக்கப் பட்டதால், வாக்களர்கள் இம்முறையும் தொப்பியில் நின்றால் தனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தினகரனுக்கு உள்ளதாம். அதனால்தான் தொப்பியை வற்புறுத்திக் கேட்டு, நீதிமன்றம் சென்று தனக்கு அதனை ஒதுக்குமாறு மனுவும் போட்டார். ஆனால், நீதிமன்றமோ இது தேர்தல் ஆணையம் தொடர்புடையது என்று கூறி ஒதுங்கிக் கொண்டது.
ஆனால் இப்போது சிக்கல் புதுவிதமாக எழுந்துள்ளது தினகரனுக்கு! தினகரன் கோரும் தொப்பியை, மேலும் 29 சுயேச்சைகள் கோருகின்றனராம். அந்த வகையில், ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தினகரனுக்கு, 'தொப்பி' சின்னம் ஒதுக்க வாய்ப்பில்லை என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரணம், தற்போது தினகரனும் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது... ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அங்கீகாரம் இல்லாத, பதிவு பெற்ற கட்சிகளின் வேட்பாளர்களும் தொப்பி சின்னத்தை கேட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் ரவி, அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி வேட்பாளர் முனியப்பன், நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷ் ஆகியோரும் தொப்பி சின்னம் கேட்டுள்ளனர்.
தேர்தல் விதிகளின்படி பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் கேட்கும் சின்னம், முதலில் ஒதுக்கப்படும். ஒரே சின்னத்தை பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்கள் பலர் கேட்டால் அவர்களுக்கே அது குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்படும்.
பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை கேட்காமல் இருந்தால் மட்டுமே சுயேச்சை வேட்பாளர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார். எனவே, சுயேச்சை வேட்பாளரான தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
ஆக, தொப்பியும் தலையை விட்டுப் போகும் சூழல் உருவாகியுள்ளது டிடிவி தினகரனுக்கு!