தலிபான்களின் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ்.ன் கருத்து- துரை வைகோ கோவையில் பேட்டி

By Velmurugan s  |  First Published Sep 6, 2023, 4:17 PM IST

தங்களது கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிப்பவர்களின் தலையை அறுப்போம் என ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் சொல்கின்றார்கள். இதே போல தான் ஆர்எஸ்எஸ்ம் செயல்படுகிறது என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.


பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநாடு குறித்தான கோவை மண்டல கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே பொதுக்கூட்டம் குறித்தான ஆலோசனைகளை மேற்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சனாதனம் கலாசாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும், இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இந்து மதம் என்பது வாழ்வியல் முறை. அதில் சிலர் திரித்து மக்களிடம் பிரிவினை உருவாக்கும் வகையில் சாதிகளை உருவாக்கினார்கள். பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் போராடியது இந்து மதத்திற்கு எதிராக அல்ல. வட நாட்டில் 48 மணி நேரமாக உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து, திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் இந்துகளுக்கு எதிரி போல சித்தரித்து வருகிறார்கள். 

Tap to resize

Latest Videos

undefined

தூத்துக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் உருட்டு கட்டையால் அடித்துக் கொலை; சொத்து தகராறில் தாய், சகோதரர் வெறிச்செயல்

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் மத்திய அரசின் குறைகளை மறைக்கவும், திசை திருப்பவும் இதை செய்கிறார்கள். எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்திருப்பதால், மத ரீதியாக காழ்ப்புணர்ச்சியை உருவாக்க பார்க்கிறார்கள். அன்பே சிவம் என்பது தான் இந்து மதம். அயோத்தியில் உள்ள ஒரு சாமியார் உதயநிதி கழுத்தை சீவுவேன் என தலிபான் போல சொல்கிறார். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்கள் படிக்க கூடாது, மாற்று கருத்து சொன்னால் கழுத்தை அறுப்பேன் என சொல்கிறார்கள். அதே கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து. இது தான் சனாதனம். மதம், சாதி வைத்து அரசியல் செய்யக்கூடாது. விவாதம் இருக்கலாம். ஆனால் வன்முறை இருக்க கூடாது. உதயநிதி பேச்சை திரித்து இந்து மதத்திற்கும், இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் திமுக, இந்தியா கூட்டணியினர் எதிரானவர்கள் என்ற கருத்தை உருவாக்க பார்க்கிறார்கள். இந்த பொய் பிரசாரத்தை முறியடிக்க மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்கள்.

வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது; சொன்னதை செய்ய முடியுமா? உ.பி. சாமியாருக்கு நேரு சவால்

அரசியலமைப்பு சட்டத்தில் பாரத் என்ற பெயர் வருவதற்கு முன்பே இந்தியா என்ற பெயர் தான் வந்தது. நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும் போது பெயர் மாற்றம்  இப்போது தேவையா? இது தேவையில்லாத சர்ச்சை. திமுக ஆட்சி குறித்து எங்களுக்கு எந்த குறைபாடும் தெரியவில்லை. எதிர்கட்சி தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி மீது குறை சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியப்படாது. பல தேர்தல்களில் பெரும்பான்மை பலம் வருவதில்லை. 

அதனால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க இதை கொண்டு வருகிறார்கள். மின் கட்டண உயர்விற்கு மாநில அரசுகள் காரணம் அல்ல. மத்திய அரசு தான் காரணம். பாஜக ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் அடித்தளம். ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே இந்தியா என்ற பெயர் வந்து விட்டது. ஆர்.பி.ஐ, பி.சி.சி.ஐ பெயர்களையும் மாற்றுவார்களா? இது தேவையில்லாத குழப்பம் எனத் தெரிவித்தார்.

click me!