
அதிமுகவின் இரு அணிகள் இடையே கட்சியின் சின்னம் கைப்பற்றுவதில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே வேண்டும் என டெல்லி தலைமை தேர்தல் அலுவலகத்தில் மனுகொடுத்தனர்.
தேர்தலில் அனைத்து கட்சிகளும் போட்டியிட்டன. அதில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் சென்றது.
அதன்பேரில் சிலரை கைது செய்தனர். ரூ.50 லட்சம் வரை பறக்கும் படையினர் கைப்பற்றினர். இதையடுத்து, ஆர்கே நகர் இடைத் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கிடையில், அதிமுக சசிகலா அணியினருக்கு இரட்டை இலை சின்னம் பெற்ற தருவதாக சுகேஷ் சந்திரா என்ற இடை தரகர் பேரம் பேசியுள்ளார். இதற்காக டிடிவி.தினகரனிடம் இருந்து ரூ.1.5 கோடி வாங்கியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் டெல்லி போலீசில் புகார் செய்தது. அதன்பேரில் போலீசார், இன்று அதிகாலை 3 மணியளவில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் வரை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.
மேலும் போலீசார், சுகேஷ் சந்திரா தங்கிய அறையை சோதனை செய்தபோது, டிடிவி.தினகரனுடன் பேசிய ஆடியோவையும் கைப்பற்றினர்.
இதைதொடர்ந்து, நாளை காலை டெல்லி குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சஞ்சய் ராவத் தலைமையில், போலீசார் சென்னை வருகின்றனர். அவர்களுடன், சுகேஷ் சந்திராவையும் அழைத்து வருவதாக தெரியவந்துள்ளது.
டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பேரில், குற்றச்சாட்டுக்கான உண்மை தன்மை என்பது, அவரை கைது செய்த பின்னரே தெரியவரும்.
குறிப்பாக டிடிவி.தினகரன் மீது, பெயிலில் வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், டிடிவி.தினகரனை கைது செய்ய வரும் போலீசார், உடனடியாக அவரை, டெல்லி அழைத்து செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது