
அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என முதல்வர் பழனிச்சாமி மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் முதல்வருக்கான ஆதரவு வாபஸ், ஆதரவை திரும்ப பெற்றதால் எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, தகுதிநீக்கம் செல்லாது என்ற அறிவிப்புக்கு தடை இல்லை, நீதிமன்றம் மறு உத்தரவிடும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு என தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தினகரனும் தேர்தலை எதிர்நோக்கி ஸ்டாலினும் செயல்பட்டு வருகின்றனர். இவை இரண்டின் பிரதான நோக்கம் என்னவென்றால் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதுதான்.
இந்நிலையில், நாகை மாவட்டம் பாளையூரில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, ஆட்சியைக் கலைக்க பல்வேறு முயற்சிகள் நடந்துவருவதாகவும் ஆனால் ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது எனவும் உறுதியாக தெரிவித்தார்.