
இந்தியா முழுவதும் இருந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க சிறப்பு ரயில்களை இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இயக்க முடியாது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெறவுள்ளன. அதே நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் மாணவர்களுக்குதமிழக அரசு சார்பில் இலவச இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட் அல்லது பேருந்து கட்டணத்துடன், போக்குவரத்து செலவுகளுக்காக 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதே போன்று கேரள அரசு தமிழகத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜஸ்தானில் அம்மாநில தமிழ் சங்கங்கள் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதனை நிராகரித்த ரயில்வே நிர்வாகம், இது தொடர்பாக தமிக அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என பதில் அளித்துள்ளது.
மேலும் ஐபிஎல் போட்டிகளுக்காக ஏற்கனவே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் நிர் தேர்வுகளுக்கென்று ரயில்களை இயக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதையடுத்து ஐபிஎல் பார்ப்பதற்கு ஸ்பெஷல் ட்ரெயின் விட முடிந்த ரயில்வே நிர்வாகத்தால் நீட் எழுதும் மாணவர்களுக்கு விட முடியாதா என கடும் கோபத்தில் உள்ளனர்.